பல்லாவரம்: குன்றத்தூரில் இருந்து போரூர் செல்லும் பிரதான சாலை கெருகம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று ஒரு வாலிபர் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற லாரி ஒன்று அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த மாங்காடு போலீசார், இறந்த நபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
சாலையின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த வாலிபர், திடீரென சாலையின் குறுக்கே ஓடி சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் முன் சக்கரத்தில் அப்படியே தலை வைத்து படுத்துக் கொள்கிறார். இதில், அந்த லாரியின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. மேலும் இறந்து போன வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓடும் லாரியின் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தற்போது அந்த சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
The post லாரியின் குறுக்கே விழுந்து வாலிபர் தற்கொலை: வீடியோ வைரல் appeared first on Dinakaran.