- பல்லாவரம்
- தாம்பரம்
- தம்பிராமம் கழகம்
- வார்டு 13
- பல்லாவரம் கண்டோன்மென்ட் வார்டு 6
- குரோம்பேட்டை அரசு மருத்துவமனை
- தின மலர்
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 13வது வார்டு மற்றும் பல்லாவரம் கன்டோன்மென்ட் 6வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வயிற்றுப்போக்கு பாதிப்பால் கடந்த 5ம் தேதி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 90க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினர். அதேபோல சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து விடு திரும்பினர். இதில் திருவேதி, மோகனரங்கம் ஆகிய இருவர் உயிரிழந்த நிலையில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் தான் அவர்கள் உயிரிழந்தார்கள் என்ற புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து அவர்களது உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அந்த உடற்கூறாய்வு முடிவு வந்த பிறகு தான் இறப்பிற்கான காரணம் தெரியும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரின் நுண்ணுயிர் பகுப்பாய்வு முடிவுகள் வெளியாகிறது. அதில் கிருமிகள் ஏதும் இல்லை என தெரியவந்துள்ளதாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு தடய அறிவியல் துறைக்கு அனுப்பப்பட்ட ரசாயன பகுப்பாய்வு முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.
இந்த முடிவுகள் வந்த பிறகே இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் ஈ கோலி பாக்டீரியாக்கள் அதில் இல்லை என தெரிவித்துள்ளனர். அதேபோல, தமிழக சுகாதார துறையும் காலரா ஏற்படுத்தும் கிருமிகள் அந்த தண்ணீரில் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சி சார்பில் கண்ணபிரான் கோவில் தெருவில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு தற்போது குடிநீர் பகிர்மான குழாய்கள் முழுவதும் குளோரின் மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் கடந்த 12ம் தேதி குடிநீர் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் வந்த பிறகு குடிநீர் பகிர்மான குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் நடைபெறும் என தாம்பரம் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை லாரிகள் மூலம் அந்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல குடிநீரில் எந்த பாதிப்பும் இல்லை எனவும், அந்தப் பகுதியில் கெமிக்கல் குடோன்கள் அதிக அளவு இருப்பதால் அதில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தாம்பரம் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம் மைக்ரோ பயாலஜி சோதனையில் கிருமி பாதிப்பில்லை என தகவல் appeared first on Dinakaran.