அடிலெய்ட்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கும் நிலையில் 2வது டெஸ்ட் பகலிரவு போட்டியாக நாளை அடிலெய்ட்டில் தொடங்குகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா மற்றும் காயத்தில் இருந்து மீண்டுள்ள சுப்மன்கில் அணிக்கு திரும்பி உள்ளது கூடுதல் பலம் சேர்க்கும். முதல் டெஸ்ட்டில் கே.எல்.ராகுல் ஓபனிங் வீரராக களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் ரோகித்சர்மா அணிக்கு திரும்பி உள்ளதால் பேட்டிங் ஆர்டர் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஜெய்ஸ்வால்-ராகுல் ஜோடியை பிரிக்க அணி நிர்வாகம் விரும்பவில்லை என தெரிகிறது. கில் 3வது இடத்தில் இறங்கும் நிலையில், கோஹ்லி 4,ரிஷப் பன்ட் 5வது இடத்தில் ஆடுவர். இதனால் ரோகித்சர்மா 6வது இடத்தில் ஆடக்கூடும் என கூறப்படுகிறது. தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் அணியில் இருந்து நீக்கப்படுகின்றனர். பவுலிங்கில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது. பும்ரா முதுகெலும்பாக இருந்து வேகத்தில் மிரட்டி வருகிறார்.
முதல் டெஸ்ட்டில் வென்ற உற்சாகத்தில் உள்ள இந்தியா அதனை தக்க வைத்துக்கொள்ளும் முனைப்பில் களம் இறங்குகிறது. மறுபுறம் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில், முதல் டெஸ்ட்டில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றி பெறவேண்டிய நெருக்கடியில் உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை மார்னஸ் லாபுசேன் அல்லது மிட்செல் மார்சுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் சேர்க்கப்படுவார் என தெரிகிறது.
ஹேசல்வுட், காயத்தால் விலகிய நிலையில் போலன்ட் ஆடும் லெவனில் இடம்பெறுவார். ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ்கேரி ,கவாஜா என வலுவான பேட்டிங்கை வரிசை உள்ளது. பும்ராவின் பவுலிங்கை சமாளிப்பதற்காக ஆஸ்திரேலிய அணியினர் வியூகம் வகுத்து கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். பகலிரவு டெஸ்ட்டில் பிங்க் நிற பால் பயன்படுத்தப்படுவதால் அதிகம் ஸ்விங் ஆகும். இதனால் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தலாம்.
டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரை பொறுத்தவரை 61.11 சதவீத வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ள இந்தியா இந்த போட்டியிலும் வென்றால் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்வதுடன் பைனல் வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொள்ளலாம். இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பு செய்கிறது.
இந்திய அணி : கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், சுப்மன்கில், விராட் கோஹ்லி, ரிஷப் பன்ட்,ரோகித்சர்மா (கே) வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா,பும்ரா, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலிய அணி: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே/ பியூ வெப்ஸ்டர், ஸ்டீவன் ஸ்மித் டிராவிஸ் ஹெட்மிட்செல் மார்ஷ் அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், நாதன்லயன், ஸ்காட் போலண்ட்.
அடிலெய்டில் இதுவரை…..
140 ஆண்டுகள் பழமையான அடிலெய்டில் ஆஸ்திரேலியா இதுவரை 82 டெஸ்ட்டில் ஆடி 45ல் வென்றுள்ளன. 18 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. 19 போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்தியா இங்கு 13 டெஸ்ட்டில் ஆடி 2ல் வெற்றி, 8ல் தோல்வி அடைந்துள்ளது.3 போட்டி டிராவில் முடிந்துள்ளது. கடைசியாக கடந்த 2020ல் கடந்த பகலிரவு டெஸ்ட்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்தியா 2018ல் வென்றுள்ளது.
2020ல் பகலிரவு போட்டியில் இந்தியா 2வது இன்னிங்சில் 36ரன்னில் சுருண்டது தான் இங்கு குறைந்தபட்ச ஸ்கோராகும்.
கோஹ்லிக்கு ராசியான மைதானம்;
அடிலெய்ட் விராட் கோஹ்லிக்கு மிகவும் ராசியான மைதானமாகும். இங்கு அவர் 4 டெஸ்ட் 8 இன்னிங்சில் ஆடி3 சதம், ஒரு அரைசதம் உள்பட 509 ரன் அடித்துள்ளார். இங்கு அதிக ரன் அடித்துள்ள இந்திய வீரர் அவர் தான். அவருக்கு அடுத்தபடியாக ராகுல் டிராவிட் ஒரு சதம் உள்பட 401 ரன் அடித்துள்ளார்.
பகலிரவில் ஆஸி.யின் ஆதிக்கம்;
ஆஸ்திரேலியா இதுவரை 12 பகலிரவு டெஸ்ட்டில் ஆடி உள்ளது. இதில் 11ல் வென்றுள்ளது. ஒரு போட்டியில் (வெ.இண்டீசுக்கு எதிராக) தோல்வி அடைந்துள்ளது. அடிலெய்டில் இதுவரை ஆடிய 7 பகலிரவு டெஸ்ட்டிலும் ஆஸி. வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இதுவரை 4 பகலிரவு டெஸ்ட்டில் ஆடி உள்ளது. இதில் சொந்த மண்ணில் நடந்த 3போட்டியிலும் (வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கைக்குஎதிராக) வென்றுள்ளது. ஆஸி.யுடன் அடிலெய்டில் நடந்த போட்டியில் தோற்றுள்ளது.
இதுவரை நேருக்கு நேர்…
இரு அணிகளும் இதுவரை 108 டெஸ்ட்டில் மோதி உள்ளன. இதில் 45ல் ஆஸ்திரேலியா, 33ல் இந்தியா வென்றுள்ளன. 29 போட்டி டிராவில் முடிந்துள்ளது.சென்னையில் 1986ல் நடந்த டெஸ்ட் டையில் முடிந்துள்ளது.
The post அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெறும்: இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம் appeared first on Dinakaran.