பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுடனான 3வது டெஸ்டின் 4ம் நாளான நேற்று இந்தியா 252 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து போராடி வருகிறது. ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்காக 5 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா – ஆஸி அணிகள் மோதி வருகின்றன. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் பிரிஸ்பேனில் நடந்து வரும் 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸி 445 ரன் குவித்துள்ளது.
பின் களமிறங்கிய இந்திய அணி, 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 4விக்கெட் இழப்புக்கு 51ரன் எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து 4ம் நாளான நேற்று கே.எல்.ராகுல் 33 ரன்னுடனும், கேப்டன் ரோகித் 0 ரன்னுடன் ஆட்டத்தை தொடர்ந்தனர். ராகுல் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ரோகித் 10 ரன்னில் நடையை கட்டினார். அடுத்து இணை சேர்ந்த ரவீந்திர ஜடேஜா பொறுப்பு உணர்ந்து விளையாடினார். அதனால் ஸ்கோர் உயர, இந்திய ரசிகர்களிடையே நம்பிக்கை துளிர்த்தது.
ஆனால் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த ராகுல் 84 ரன்னில் ஆட்டமிழந்தார். பிறகு ஜடேஜாவுடன், புதிய நம்பிக்கை நட்சத்திரம் நிதிஷ் குமார் இணைந்தார். அவர் 16 ரன்னிலும், அடுத்து வந்த முகமது சிராஜ் ஒரு ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். அரை சதம் விளாசிய ஜடேஜா 77 ரன்னில் ஆட்டமிழந்தார் முக்கிய வீரர்கள் வெளியேறியதால் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் விரைவாக முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடியதால் அவர்களை அவுட் ஆக்க முடியவில்லை. இதற்கிடையில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது இந்தியா 74.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்திருந்தது.
இன்னும் ஒரு விக்கெட் எஞ்சியிருக்க களத்தில் உள்ள இந்திய வீரர்கள் ஆகாஷ் தீப் 27, ஜஸ்பிரித் பும்ரா 10 ரன்னுடனும் கடைசி நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளனர். ஒரு நாள் மட்டுமே மீதமிருப்பதால் 3வது டெஸ்ட் டிராவில் முடிவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
The post ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் டிரா செய்ய இந்தியா போராட்டம்: 252க்கு 9 விக்கெட்டை இழந்து திணறல் appeared first on Dinakaran.