×

திருவெண்ணெய் நல்லூர் அருகே மலட்டாறு வெள்ளத்தில் சிக்கி மரத்தில் 17 மணி நேரம் போராடிய தாய்- மகன் உயிருடன் மீட்பு

திருவெண்ணெய்நல்லூர், டிச. 4: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே, மலட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய், மகன் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதேவேளையில் விவசாயி மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். பெஞ்சல் புயலால் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையில் சாத்தனூர் அணை நிரம்பி 1 லட்சத்து 70 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால், விழுப்புரம் மாவட்டததில் தென்பெண்ணை ஆறு மற்றும் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சித்தலிங்கமடம், புதுப்பாளையம், பையூர், தொட்டிகுடிசை, திருவெண்ணெய்நல்லூர், ஏமப்பூர், கிராமம், ஆலங்குப்பம், அரசூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கரையோர கிராமங்களில் வெள்ளநீர் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

இந்த வெள்ளத்தில் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏமப்பூர் கிராமத்தை சேர்ந்த கலையரசன் (57) என்பவரது வீடு நேற்று முன்தினம் வெள்ளத்தில் மூழ்கியது. உடனடியாக கலையரசன் மற்றும் அவரது மனைவி சுந்தரி, மகன் உட்பட 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அப்போது உயிர் தப்பிக்க ஆற்றின் நடுவே இருந்த வேப்பமரத்தை பிடித்து, கிளையில் ஏறி அமர்ந்து காப்பாற்றும்படி கூக்குரல் எழுப்பினர். ஆனால் வெள்ளத்தின் அகோர பாய்ச்சல் சத்தத்தில் மக்களுக்கு அவர்களது குரல் கேட்கவில்லை. மதியம் 2.30 மணிக்குமேல் பொதுமக்கள் சிலர் அவர்களை பார்த்து வீடியோ பதிவு செய்து, அவற்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மாவட்ட ஆட்சியரின் உதவியை கோரினர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் பழனி ஏற்பாட்டில், கோவை சூலூர் விமானப்படை விமான தளத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் நேற்றிரவு வரவழைக்கப்பட்டது.

அப்போது இடி, மின்னல், மழை, இருட்டு காரணமாக சம்பவ இடத்தை துல்லியமாக கணிக்க முடியாததால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் ஆற்றில் நீர்வரத்து குறைந்ததும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விசைப்படகில் சென்று கலையரசன் மனைவி சுந்தரி (50), அவரது மகன் புகழேந்தி (25) ஆகிய இருவரும் மீட்கப்பட்ட நிலையில், கலையரசன் மட்டும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இந்நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நேற்று கலையரசனை தேடி வந்த நிலையில், மலட்டாற்று நடுவே மண்ணில் புதையுண்டு சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post திருவெண்ணெய் நல்லூர் அருகே மலட்டாறு வெள்ளத்தில் சிக்கி மரத்தில் 17 மணி நேரம் போராடிய தாய்- மகன் உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Malattaru ,Thiruvenney Nallur ,Thiruvenneynallur ,Villupuram district ,Benjal ,Nallur ,Dinakaran ,
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு;...