×

திருக்கோவிலூர் அருகே போலீஸ் சோதனையில் நாட்டு துப்பாக்கி, 10 கிலோ மான்கறி பறிமுதல்

*மிளகாய் பொடி வீசிவிட்டு தப்பிய 2 பேருக்கு வலை

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அருகே நாட்டு துப்பாக்கி மற்றும் 10 கிலோ மான் கறியை பைக்குடன் போட்டுவிட்டு தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த தேவனூர் கூட்ரோடு பகுதியில் அரகண்டநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருபரன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முற்பட்டனர். ஆனால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் நிற்காமல் வண்டியை வேகமாக ஓட்டி சென்றனர். இதனால் உஷாரான போலீசார் அவர்களை வாகனத்தில் விரட்டிச் சென்றனர்.

மணம்பூண்டி தென்பெண்ணையாற்று பாலம் அருகே சென்றபோது பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் தன் பையில் வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து போலீசார் மீது தூவினார். தொடர்ந்து வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு 2 பேரும் தப்பி சென்றனர்.ஒருகணம் தடுமாறிய போலீசார், பின்னர் மர்ம நபர்கள் விட்டுச்சென்ற பைக்கை பார்த்தபோது அந்த வண்டியில் ஒரு நாட்டு துப்பாக்கி, 10 கிலோ மான் கறி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் நாட்டுத் துப்பாக்கி, மான்கறி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர். தப்பி ஓடிய 2 பேரும் வன விலங்குகளை வேட்டையாடும் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போலீசார் துரத்தியபோது அவர்கள் மீது மிளகாய்பொடி வீசி விட்டு 2 பேர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திருக்கோவிலூர் அருகே போலீஸ் சோதனையில் நாட்டு துப்பாக்கி, 10 கிலோ மான்கறி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,Tirukovilur ,Viluppuram District Thirukovilur ,
× RELATED பைக்கில் லிப்ட் கொடுத்து பெண்ணிடம் வழிப்பறி