*இதுவரை 5,800 ஏக்கர் சேதம்
*யாரும் அச்சம் அடைய வேண்டாம்
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழையால் பாதித்த பயிர்கள் கணக்கெடுப்பு நடத்திய உரிய நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்படும். இது வரை 5,800 ஏக்கர் பரப்பளவில் சேதமடைந்துள்ளது. தண்ணீர் முழுமையாக வடிந்த பின்ன கணக்கெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டு நாகப்பட்டினம் அருகே நரியங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வேதாரண்யம் அருகே அகஸ்தியம்பள்ளி பல்நோக்கு பேரிடர் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதன்படி நாகப்பட்டினம் அருகே பெரிய நரியங்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளி தற்காலிக முகாமில் பெரிய நரியங்குடியை சேர்ந்த 231 பேர் தங்கியுள்ளனர். வேதாரண்யம் அருகே அகஸ்தியம்பள்ளி பல்நோக்கு பேரிடர் மையத்தில் உப்புத்தெருவைச் சேர்ந்த 43 பேர் தங்கியுள்ளனர்.
அதே போல் வேதாரண்யம் காந்திநகர் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி தற்காலிக முகாமில் காந்திநகரை சேர்ந்த 132 பேர் தங்கியுள்ளனர். தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர், உணவு ஆகிய அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழை தொடர்பாக வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நாகப்பட்டினம் நகராட்சி பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதை கண்டறிந்து பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. மின்சாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகிய துறைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மழை தற்போது நின்றுவிட்டதால் பள்ளிகள் திறக்கப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். மழைநீர் முற்றிலுமாக வடிந்த பின்னர் பயிர் சேதம் குறித்து கணக்கீடு செய்யப்படும்.
பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பிடு வழங்க பரிந்துரை செய்யப்படும். மாவட்டத்தில் 5 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் சேதம் அடைந்துள்ள கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சம் இன்றி இருக்க வேண்டும். முதல்வர் அவ்வப்பொழுது சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் அமைச்சர்களை தொடர்பு கொண்டு மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து வருகிறார். எனவே யாரும் அச்சம் அடைய வேண்டாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.அதனை தொடர்ந்து தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் தாமரைப்புலம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். கலெக்டர் ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், எம்எல்ஏ நாகைமாலி. வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, வேதாரண்யம் ஆர்டிஓ திருமால், வேளாண்மை இணை இயக்குநர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழையால் பாதித்த பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க பரிந்துரை appeared first on Dinakaran.