×
Saravana Stores

தென்பெண்ணையாற்றில் 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்: சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து அடியோடு நிறுத்தம்


* வெள்ளக்காடாக மாறிய, கடலூர், விழுப்புரம்
* தரைப்பாலங்கள் மூழ்கி, 150 கிராமங்கள் துண்டிப்பு
* சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையிலும் கடும் பாதிப்பு

விழுப்புரம்: பெஞ்சல் புயல் காரணமாக 48 மணி நேரம் இடைவிடாமல் பெய்த பேய்மழையால் விழுப்புரம் மாவட்டம் வெள்ளக்காடாக மாறியது. தேசியபேரிடர் மீட்புகுழு மற்றும் மாநில பேரிடர்மீட்பு குழுவினர், காவல்துறை, தீயணைப்பு, ேபரிடர் மேலாண்மை துறை இணைந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். நேற்று 2வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்தன. தற்போதுவரை 88 நிவாரண முகாம்களில் 5,694 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சாத்தனூர் அணையிலிருந்து நேற்றுமுன்தினம் 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் மழைநீருடன் சேர்ந்து விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் காட்டாற்று வெள்ளம்போல் பாய்கிறது. இதன் காரணமாக மலட்டாறு உள்ளிட்ட கிளை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

விழுப்புரம் அருகே திருப்பாச்சனூர், மேட்டுப்பாளையம், பில்லூர், காணை, மரக்காணம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் 20 இடங்களில் தரைப்பாலம் மூழ்கியதால் 150 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் பகுதியில் மலட்டாற்றின் பாலத்தை கடந்து தண்ணீர் சென்றதால் காலை முதல் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகளவு தண்ணீர் சென்ற நிலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், 2 ஆயிரம் குடியிப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், திருச்சி மாநகராட்சி, புதுக்கோட்டை நகராட்சி ஊழியர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. 13 ஆயிரம் ஹெக்டர் அளவிற்கு நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.

ஒருவழியில் போக்குவரத்து துவக்கம்: இந்நிலையில் 8 மணி நேரத்துக்கு பிறகு நேற்றிரவு தண்ணீர் வடிந்ததால் முதலில் கனரக வாகனங்களும், அதன்பிறகு பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களும் குறைந்த வேகத்தில் ஒரு வழியில் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டன. கடலூர்:தென்பெண்ணை ஆற்றில் இருந்து வெள்ள நீர் கடலூர் மாநகரப் பகுதிகளான குறிஞ்சி நகர், நடேசன் நகர்,குமரப்பா நகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதுபோன்று கங்கணாங்குப்பம் உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் சூழ்ந்துள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அதிகாலை வேளையில் பதறி அடித்து மக்கள் வெளியேறினர். அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் மற்றும் கண்காணிப்பு அலுவலர் ராமன், எம்எல்ஏ ஐயப்பன், மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் நேற்று அதிகாலை முதல் பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று உணவு வழங்குவதற்கும் தொடர்ந்து வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை பேரிடர் மீட்பு குழுவினர்களுடன் ஈடுபட்டனர்.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததை தொடர்ந்து கடலூர் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி> பெஞ்சல் புயல் தாக்கத்தால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊக்கங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் கனமழை கொட்டி தீர்த்தது. ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 50 செமீ மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. ஏரிகள் நிரம்பி, உபரி நீர் பரசனேரியை அடைந்தது. பரசனேரி நிரம்பி வழிந்ததால், ஊத்தங்கரை அண்ணா நகர் குடியிருப்புகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியது. வீடுகளை இழந்த மக்கள் மீட்கப்பட்டு, ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபம் மற்றும் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏரிகள் நிரம்பியதால் திருப்பத்தூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் சூழ்ந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால், இலக்கியம்பட்டி ஏரி நேற்று முன்தினம் இரவு நிரம்பியது. ஏரியில் இருந்து வெளியேறிய வெள்ள நீர், அழகாபுரி பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

சேலம்: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால், மலைப்பாதையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தது. பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஏற்காட்டில் உள்ள 22 மலை கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பெஞ்சல் மழையால் ஏற்பட்ட புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 40 கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கி பலியாகின.

112 குடிசைகள் இடிந்து சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் மூழ்கி உள்ளன. ஊத்தங்கரையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு செய்தார். .

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று மழை ஓய்ந்த நிலையில் நகரப்பகுதியில் படிப்படியாக வெள்ளம் வடிந்தது. ஒருசில இடங்களில் வீடுகளுக்கு புகுந்த மழைநீரை மோட்டர் மூலம் அகற்றும் பணியில் நகராட்சி, பொதுப்பணித்துறை ஈடுபட்டது. மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பினர். இதனிடையே சாத்தனூர் அணையிலிருந்து 1,70,000 கன அடி திறக்கப்பட்டத்தால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரமுள்ள ஆராய்ச்சிகுப்பம், கொம்மந்தான்மேடு, சோரியாங்குப்பம், குருவிநத்தம் உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இதில் 10 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தீவுகள் ஆனது.

வெள்ளத்தில் அடித்து சென்ற 50 வேன், கார்கள்
ஊத்தங்கரை பஸ் நிலையம் அருகில் பரசனேரி கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட சுற்றுலா வேன்கள் மற்றும் கார்கள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கரை ஒதுங்கிய வாகனங்களை பொக்லைன் மூலம் நேற்று மீட்டனர். சின்னப்பனேரியில் அதிக நீர்வரத்து காரணமாக, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வீடியோ கால் மூலம் அமைச்சரிடம் முதல்வர் பேச்சு
கடலூர் மாநகர் மற்றம் கிராம பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள பாதிப்புகளை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு செய்தார். கடலூர் மாநகராட்சி முத்தையா நகர் பகுதியில் நேற்று காலை அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்தும், செல்போனில் வீடியோ கால் மூலமாக அமைச்சரிடம் பேசினார். நிவாரணை நடவடிக்கைகள் குறித்து அவர் முதல்வரிடம் விளக்கினார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களிடமும் பேசினார்.

ஊத்தங்கரையில் எடப்பாடி ஆய்வு
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அண்ணா நகர், பரசனேரி ஆகிய பகுதிகளை, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஊத்தங்கரை பரசனேரி கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 50 வாகனங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு கரை ஒதுங்கியுள்ளது. வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அண்ணா நகரில் வசிக்கும் மக்கள் 50க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

கோயிலில் வெள்ளம்: 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் தவிப்பு
விழுப்புரம் மாவட்டம் அரசூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் வராகி அம்மன் கோயிலில் வௌஉள்ளது. இக்கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயில் வளாகத்தில இருந்தபோது, காட்டாற்று வெள்ளம் கோயிலை சூழ்ந்தது. இதனால் அவர்கள் அங்கேயே சிக்கினர். அவர்கள் தாங்கள் வெள்ளத்தில் சிக்கியதை வீடியோவாக பதிவு செய்து, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டதன் அடிப்படையில், நேற்று இரவு திருச்சியில் இருந்து வந்த சிறப்பு காவல் படையினர் மற்றும் தீயணைப்பு குழுவினரும் சேர்ந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

‘புதுச்சேரியில்ரேஷன் கார்டுக்கு ₹5 ஆயிரம் நிவாரணம்’
புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் நேற்று கூறுகையில், புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரணமாக தலா ₹5 ஆயிரம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ₹30 ஆயிரம், சேதமடைந்த படகுக்கு ₹10 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படும். கூரை வீட்டுக்கு ₹15 ஆயிரம், வீடுகளுக்கு தலா ₹10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணமாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். ஒன்றிய அரசிடம் ரூ.100 கோடி நிதி கேட்டு தலைமை செயலர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

242 மின்கம்பங்கள் விழுந்தன: இருளில் மூழ்கிய கிராமங்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக 242 மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன.அதனை சீரமைத்து உடனடிமின்விநியோகம் வழங்கிட முதல்வர் உத்தரவுபடி மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விழுப்புரத்தில் முகாமிட்டு பணிகளை துரிதபடுத்தி வருகிறார். . தற்போதுவரை 50 சதவீதம் இடங்களில் இந்தபணிகள் முடிந்து மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் ஊழியர் உள்பட 6 பேர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலுக்கு டாஸ்மாக் ஊழியர் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் அருகே ஒருகோடி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(49). டாஸ்மாக் ஊழியரான இவர் நேற்றுமுன்தினம் இரு சக்கரவாகத்தில் சென்றபோது வாய்க்கால் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். தொந்திரெட்டிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார்(50) என்ற விவசாயி நேற்றுமுன்தினம் வயலுக்கு செல்ல செங்கால் ஓடையை கடந்தபோது வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டு உயிரிழந்தார். வளவனூர் பகுதியில் மேலும் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், காணை காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் ஒருவரும், கெடார், கஞ்சனூர் காவல்நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் 2 பேர் என இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், 25 மாடுகள், 14 பசு கன்று, 58 ஆடுகள் என 97 கால்நடைகள் உயிரிழந்துள்ளது. 54,280 கோழிகளும் உயிரிழந்துள்ளன.

மீண்டும் மிரட்டும் மழை
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலினால் இடைவிடாமல் பெய்த மழை நேற்று முன்தினம் இரவு ஓய்ந்தது. நேற்று காலையில் வானம் வெளிச்சத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் காலை 10 மணியளவில் மீண்டும் மிதமான மழைபெய்ததால், ஏற்கனவே வெள்ளத்தில் தத்தளித்துகொண்டிருக்கும் நிலையில் மேலும் மழைபொழிவை எப்படி சமாளிக்கபோகிறோம் என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post தென்பெண்ணையாற்றில் 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்: சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து அடியோடு நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Tenpenna River ,Chennai-Trichy highway ,Cuddalore ,Villupuram ,Salem ,Dharmapuri ,Krishnagiri ,Thiruvannamalai ,Villupuram district ,Benjal ,South Penn River ,Chennai ,Trichy Highway ,
× RELATED தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை..!