திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக இடைவிடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில், தீபம் ஏற்றும் மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில், நேற்று முன்தினம் மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் சிக்கிக்கொண்டது. அதில், ஒரு வீட்டுக்குள் இருந்தவர்கள் ஏற்கனவே வெளியேறியதால் தப்பினர். மற்றொரு வீட்டில் பாறைகளும் அடுத்தடுத்து விழுந்தன. அந்த வீட்டுக்குள் இருந்த கூலித்தொழிலாளி ராஜ்குமார்(32) அவரது மனைவி மீனா(26), மற்றும் அவர்களது மகன் கவுதம்(9), மகள் மீனா(7) மேலும் உறவினர்களான சுரேஷ் என்பவரது மகள் மகா(12), சரவணன் மகள் ரம்யா(12), மஞ்சுநாதன் மகள் வினோதினி(14) ஆகிய 7 பேரும் மண் சரிவில் சிக்கி வெளியேற முடியவில்லை.அவர்களை மீட்கும் பணியில் யாரும் ஈடுபட முடியவில்லை.
அதைத்தொடர்ந்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்பி சுதாகர் மற்றும் தீயணைப்புத் துறையினர் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனாலும், மண் சரிவில் சிக்கி வீட்டின் அருகே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று அதிகாலை தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 30 பேர், மாநில பேரிடர் குழுவை சேர்ந்த 50 பேர் மற்றும் தீயணைப்பு துறையினர் கொண்ட மீட்பு படையினர் களமிறங்கினர். . அங்கு சரிந்து விழுந்திருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. ல், பொக்லைன், ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வர முடியாததால், மண் சரிவை அகற்றுவதில் சிக்கலும் தாமதமும் ஏற்பட்டது. தொடர்ந்து, நேற்று சிறிய ஜேசிபி இயந்திரத்தை குறுகலான பாதையின் வழியே படிப்படியாக கொண்டு செல்லும் முயற்சி நடந்தது.
தொடர்ந்து 12 மணி நேர மீட்பு பணிக்கு பின் நேற்று மாலை 5.45 மணியளவில் ராஜ்குமாரின் மகன் கவுதம் சடலமும் தொடர்ந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் 2 பேரின் சடலங்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து பணிகளை துரிதப்படுத்தினார். ₹5லட்சம் நிவாரணம்: பின்னர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ‘திருவண்ணாமலையில் இதுவரை எப்போது இல்லாத வகையில் கனமழை பெய்தது. முதல்வரின் உத்தரவுபடி, தேவையான மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகிறது. மண் சரிவில் சிக்கிய 7 பேரையும் உயிருடன் மீட்கவே, அரசு முயற்சி செய்தது. மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் 7 பேரின் குடும்பத்திற்கு தலா ₹5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
மண் சரிவு ஆய்வுக்கு ஐஐடி குழு வருகை
மீட்பு பணிகளை ஆய்வு செய்த பின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திருவண்ணாமலை மலை மண்ணும், கற்களும் நிறைந்த மலை என்பதால், தொடர்மழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பாறைகள் உருண்டு விழுந்ததில் ஒரு வீடு மண்ணில் புதைந்தது. ஐஐடி பேராசிரியர்கள் மோகன், பூமிநாதன் உள்ளிட்ட வல்லுநர் குழுவினர் வந்து இங்குள்ள கற்களையும், மண்ணையும் ஆய்வு செய்து இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர் மண் சரிவு பொதுமக்கள் பீதி
திருவண்ணாமலையில் பெய்த கனமழையால், மலையின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. நேற்று மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணி நடந்து கொண்டிருந்த நேரத்தில் அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் மற்றொரு இடத்தில் மிகப்பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் வீடுகள் ஏதும் இல்லாததால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன. ெதாடர்ந்து மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த பெரும்பாலானவர்கள் ஆபத்தான பகுதிகளில் இருந்து வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறி வருகின்றனர்.
The post திருவண்ணாமலை தீபமலையில் ஏற்பட்ட மண் சரிவால் புதைந்த வீட்டில் 14 மணி நேரம் போராடி 5 சடலங்கள் மீட்பு: மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.