×
Saravana Stores

மாலத்தீவு செல்லும் சாத்தூர் வெள்ளரி: மருத்துவ குணமிக்கதால் செம வரவேற்பு

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் விளையும் வெள்ளரிக்கு பொதுமக்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. இப்பகுதியில் உள்ள வன்னிமடை, போத்திரெட்டிபட்டி, நென்மேனி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் கிணற்றுப் பாசனம் மூலம் விளைய வைக்கின்றனர். தண்ணீர் தேவை குறைவு என்பதால் விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர். கரிசல் மண்ணில் விளையும் வெள்ளரி சாப்பிட சுவையாக இருக்கும். இப்பகுதி கிராமங்களில் குண்டு மிளகாய் மானாவாரி பயிராக அதிகளவில் சாக்குபடி செய்யப்படுகிறது.

இது காரத்தன்மை மிக்கதாகும். எனவே, சமையலில் காரத்தன்மையை குறைக்க வெள்ளரிக்காய், பாசிப்பருப்பு சேர்ந்த கூட்டை சேர்ப்பர். இப்பகுதியில் விளைவிக்கப்படும் வெள்ளரிக்காய்கள் உள்ளூரில் விற்பதோடு, வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இங்கிருந்து திருவனந்தபுரம் அனுப்பி, அங்கிருந்து மாலத்தீவு செல்கிறது. மேலும், கோயம்புத்தூர், கன்னியாகுமாரி, நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் அனுப்பப்படுகிறது. மேலும், வெள்ளரியில் மருத்துவப் பயன்களும் அதிகளவில் உள்ளன.

இது குறித்து சித்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘வெள்ளரி கொழுந்து, பிஞ்சு, காய், பழம், வேர் ஆகியவை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரியைச் சாப்பிடுவதால், தாகம் தணிப்பதோடு நாவின் வறட்சியைப் போக்கி பசியை தூண்டுகிறது. இரைப்பை புண், மலச்சிக்கலை தீர்க்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். வயிற்றுப் புண்ணுக்கும் மருந்தாகிறது.

வெள்ளரியில் உள்ள சத்துக்கள்
வெள்ளரியில் சோடியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிக்கான், குளோரின் ஆகிய சத்துகள் உள்ளன. ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். பல் ஈறுகளைப் பாதுகாக்கும் திறன் கொண்டது. இன்சுலினை சுரக்கச்செய்யும் கணைய செல்களுக்கு தேவைப்படும் வளர்ச்சி ஊக்கியை (ஹார்மோன்) கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு வெள்ளரி சிறந்த மருந்தாகும்.

வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்றையும் போக்கக்கூடியது வெள்ளரிப்பிஞ்சு. வெள்ளரி இலைகளை காய வைத்து சீரகம் சேர்த்து வறுத்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால் தொண்டை நோய் குணமாகும். வெள்ளரி விதையை அரைத்து 5 பங்கு நீர் சேர்த்து வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் நீர் எரிச்சல், நீரடைப்பு, கல் அடைப்பு, சதை அடைப்பு, வெள்ளைப்படுதல் ஆகியவை குணமாகும். வெள்ளரிக்காயைப் போல வெள்ளரிப்பழமும் மருந்தாக அமைகிறது. கோடையில் ஏற்படும் நோய்களை சரிசெய்வதோடு கர்ப்பப்பை பிரச்னை, அடிவயிற்றில் ஏற்படும் சூடு ஆகியவற்றை சரி செய்கிறது. இவ்வாறு தெரிவித்தார்.

The post மாலத்தீவு செல்லும் சாத்தூர் வெள்ளரி: மருத்துவ குணமிக்கதால் செம வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Maldives ,Virudhunagar district ,Vannimada, ,Potretipatti, Nenmani ,
× RELATED வத்திராயிருப்பு பகுதியில் காட்டு...