×
Saravana Stores

குற்றவாளி எச்.ராஜாவுக்கு எதிரான 2 வழக்குகளில் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!!

சென்னை : தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு எதிரான 2 வழக்குகளில் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், தி.மு.க. எம்.பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகாரில் ஈரோடு நகர் காவல் துறை, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ராஜாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எச். ராஜா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணையை முடிக்க சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயவேல் முன் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு வழக்கின் தீர்ப்பை கடந்த மாதம் 14ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி ஜெயவேல், இரண்டு வழக்குகளிலும் இன்று தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில், ” எச். ராஜா மீதான புகார் காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும், சம்பந்தப்பட்ட இரு பதிவுகளும் எச். ராஜாவின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து அனுப்பப்பட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது. எனவே எச். ராஜா இரண்டு வழக்கிலும் குற்றவாளி என கருதப்படுகிறார். எச்.ராஜாவுக்கு எதிரான 2 வழக்குகளில் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அத்துடன் 2 வழக்குகளிலும் தனித்தனியாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது, “இவ்வாறு தெறிவித்தார். மேலும் மேல்முறையீடு செய்ய ஹெச். ராஜா தரப்பில் கோரிக்கை வைத்ததை ஏற்று தண்டனையை 30 நாட்களுக்கு நீதிபதி நிறுத்திவைத்தார். சிறப்பு நீதிமன்றத்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட எச்.ராஜா சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

The post குற்றவாளி எச்.ராஜாவுக்கு எதிரான 2 வழக்குகளில் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : H. Raja ,Chennai ,Tamil Nadu ,BJP ,Special Court ,Coordination Committee ,Bharatiya Janata Party ,Dinakaran ,
× RELATED சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து...