×
Saravana Stores

புனேவில் 2வது டெஸ்ட்; பன்ட், கில் விளையாட தயார்…! பயிற்சியாளர் தகவல்

புனே: நியூசிலாந்து அணியுடன் புனேவில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட ரிஷப் பன்ட், ஷுப்மன் கில் இருவரும் முழு உடல்தகுதியுடன் தயாராகிவிடுவார்கள் என இந்திய அணி துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்சேட் கூறியுள்ளார்.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பெங்களூரு, எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்னுக்கு சுருண்டதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வானம் மேகமூட்டமாக இருந்ததுடன் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவு செய்தது பெரும் பின்னடைவை கொடுத்தது.

இதனால், புனே டெஸ்ட் போட்டிக்கு சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், பெங்களூரு டெஸ்ட் போட்டியில் கீப்பிங் செய்தபோது முழங்கால் மூட்டில் காயம் அடைந்த ரிஷப் பன்ட் மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக முதல் டெஸ்டில் விளையாடாத முன்னணி பேட்ஸ்மேன் ஷுப்மன் கில் இருவரும் புனேவில் களமிறங்குவார்களா என்பது கேள்விக்குறியாக இருந்தது. இது குறித்து, இந்திய அணி துணை பயிற்சியாளர் டென் டஸ்சேட் நேற்று கூறுகையில், ‘பன்ட், கில் இருவரும் முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயாராகிவிடுவார்கள் என நம்புகிறேன். பன்ட் கொஞ்சம் சிரமப்பட்டாலும், அவர் விக்கெட் கீப்பராக செயல்படுவதில் எந்த பிரச்னையும் இருக்காது. அஷ்வினுக்கு காயம் எதுவும் இல்லை. அவர் ஃபிட்டாக உள்ளார்.

கில் தசைப்பிடிப்பும் சரியாகிவிட்டது’ என்றார். நேற்றைய வலைப்பயிற்சியின்போது துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொண்ட நிலையில், பன்ட் அதை வெளியில் இருந்து கவனித்துக்கொண்டிருந்தார்.பின்னர், பேட்டிங் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட பன்ட் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தினார். பயிற்சியின் நிறைவுக் கட்டத்தில் அவர் சிறிது நேரம் கீப்பிங்கிலும் ஈடுபட்டார். இதனால் இந்திய அணி நிர்வாகம் உற்சாகம் அடைந்துள்ளது. எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிக்கான அணியில் தமிழ்நாடு ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து, களமிறங்கும் 11 வீரர்களை இறுதி செய்வது இந்திய அணி நிர்வாகத்துக்கு மிகப் பெரிய சவாலாகவே இருக்கும்.

The post புனேவில் 2வது டெஸ்ட்; பன்ட், கில் விளையாட தயார்…! பயிற்சியாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : PUNE ,PUNT ,KILL ,Ryan Den Tussate ,Rishab Bunt ,Schupman Gill ,New Zealand ,India ,Gill ,Dinakaran ,
× RELATED துளித் துளியாய்…