×
Saravana Stores

யுஇஎப்ஏ நேஷன்ஸ் கால்பந்து: இஸ்ரேல் – பிரான்ஸ் போட்டிக்கு 4,000 போலீசார் குவிப்பு; பீதியால் குறைந்த ரசிகர்கள் வருகை

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று நடக்கவுள்ள, பிரான்ஸ் – இஸ்ரேல் இடையிலான, யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டிக்கு 4,000 போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாலஸ்தீன ஆதரவாளர்கள் முற்றுகையிடக் கூடும் என்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. ஐரோப்பிய யூனியன் கால்பந்து சங்கங்கள்அமைப்பு (யுஇஎப்ஏ) ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து, பீச் கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. கண்டங்கள் இடையிலான போட்டிகளையும் இந்த அமைப்பு நடத்துகிறது. தற்போது, நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டிகளை யுஇஎப்ஏ நடத்துகிறது.

இதற்கிடையே, கடந்த வாரம், நெதர்லாந்தில் நடக்கும் கால்பந்து ஆட்டத்தில் இஸ்ரேல் அணி பங்கேற்கும் போட்டிகளை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது பாலஸ்தீன ஆதரவாளர்கள் திடீரென திரண்டு வந்து, இஸ்ரேல் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பதற்றம் நிலவியது. அங்கிருந்த போலீசார், இஸ்ரேல் ரசிகர்களை காப்பாற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர். அவர்களை மீட்க இரு விமானங்களை அனுப்பும்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உத்தரவிட்டிரு்தார்.

இந்நிலையில், பாரீசில் இன்று நடக்கும் யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இஸ்ரேல் – பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின்போது அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, ஸ்டேடியத்தின் உள்ளேயும் வெளியேயும் 2500 போலீசார், நகரம் முழுவதும் 1500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போட்டி நடக்கும் ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானம், 80 ஆயிரம் பேர் அமரக் கூடியது. ஆனால், பாலஸ்தீன ஆதரவாளர்கள் முற்றுகையிடக் கூடும் என்ற அச்சமும், என்ன ஆகுமோ என்ற பதற்றமும் நிலவுவதாலும், போலீசாரின் கெடுபடிகளாலும் 20 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post யுஇஎப்ஏ நேஷன்ஸ் கால்பந்து: இஸ்ரேல் – பிரான்ஸ் போட்டிக்கு 4,000 போலீசார் குவிப்பு; பீதியால் குறைந்த ரசிகர்கள் வருகை appeared first on Dinakaran.

Tags : UEFA Nations Football ,Israel ,France ,Paris ,UEFA Nations League football match ,Dinakaran ,
× RELATED கால்பந்து போட்டியை பார்க்க சென்ற போது...