செஞ்சூரியன்: இந்தியா -தென்ஆப்ரிக்கா இடையே 4 போட்டி கொண்ட டி,20 தொடர் தென்ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் தென்ஆப்ரிக்காவும் வென்ற நிலையில் 3வது போட்டி செஞ்சூரியனில் நேற்றிரவு நடந்தது. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன் குவித்தது. திலக்வர்மா 56 பந்தில், 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 107, அபிஷேக் சர்மா 25 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 50 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா அணியில் மார்கோ ஜான்சன் 17 பந்தில் 54, கிளாசென் 22 பந்தில் 41, கேப்டன் மார்க்ரம் 29 ரன் அடித்தனர். 20 ஓவரில் தென்ஆப்ரிக்காவால் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 11ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.
இந்திய பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங் 3, வருண் சக்ரவர்த்தி 2, ஹர்திக்பாண்டியா, அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட் எடுத்தனர். திலக்வர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் கூறுகையில், வெற்றியால் மிகவும் மகிழ்ச்சி. அணி மீட்டிங்கில் சொன்னது போல் நாங்கள் விரும்பும் கிரிக்கெட் பிராண்டை ஆடினோம். இளம் வீரர்களிடம் அச்சமின்றி அடித்து ஆடுவோம் என்பதை தான் சொல்லி வருகிறோம். சில நேரம் சொற்ப ரன்னில் அவுட் ஆனாலும் அவர்களை ஆதரிக்கிறோம். இளம் வீரர்களின் அதிரடி பேட்டிங் எனது வேலையை மிகவும் எளிதாக்குகிறது. மேலும் நாங்கள் சரியான திசையில் செல்கிறோம் என்பதை உணர்கிறேன். 2வது போட்டியில் தோல்விக்கு பின் திலக் வர்மா எனது அறைக்கு வந்து, 3வது இடத்தில் விளையாட வாய்ப்பு கொடுங்கள், நான் நன்றாக ஆட விரும்புகிறேன் என சொன்னார். தாராளமாக ஆடுங்கள் என்றேன்.
அவர் சொன்னதைச் செய்துவிட்டார்” என தெரிவித்தார். ஆட்டநாயகன் திலக் வர்மா கூறுகையில், இந்திய அணிக்காக சதம் அடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. நான் சரியான நேரத்தில் அதை செய்திருப்பது மிக்க மகிழ்ச்சி. நான் சதம் அடித்ததற்கு முக்கிய காரணம், பாராட்டுக்கள் அனைத்தும் கேப்டன் சூர்யகுமாருக்கு தான் சேரும். அவர்தான் 3வது வீரராக களம் இறங்க வாய்ப்பு கொடுத்தார். களத்திற்கு சென்று முழு சுதந்திரத்துடன் விளையாடினேன். ஆடுகளம் பவுன்ஸ் கணிக்க முடியாதபடி இருந்தது. அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த உடன் புதிய வீரர்கள் வந்து பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. இதனால் நான் கடைசி வரை நின்று விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. என்னை போன்ற வீரருக்கு அணி நிர்வாகம் நல்ல உறுதுணையாக இருக்கிறது, என்றார். தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்க 4வது மற்றும் கடைசி போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நாளை நடக்கிறது.
The post இந்திய அணிக்காக சதம் அடிக்க வேண்டும் என்பது எனது கனவு: ஆட்டநாயகன் திலக்வர்மா பேட்டி appeared first on Dinakaran.