* பார்வையற்றவர்களுக்கான 4வது உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி, வரும் 22ம் தேதி முதல் டிச. 3ம் தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நேற்று, புதுச்சேரியை சேர்ந்த தினகர் கோபு உட்பட 17 வீரர்களை கொண்ட இந்திய அணியை பார்வையற்றவர்களுக்கான இந்திய கிரிக்கெட் சங்கம்(சிஏபிஐ) அறிவித்தது. இந்தப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன.
* ரஞ்சி கோப்பை போட்டியின் 5வது சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த சாய் கிஷோர் விடுவிக்கப்பட்டு, நாரயண் ஜெகதீசன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கூடவே சாய் கிஷோருக்கு ஆடும் அணியிலும் வாய்ப்பு தரவில்லை. அவருக்கு பதில் லக்ஷய் ஜெயின் ஆடும் அணியில் இடம் பிடித்ததுடன், முதல் முறையாக ரஞ்சி தொடரிலும் அறிமுகமாகி இருக்கிறார்.
* பிரக்யானந்தாவின் ‘வீக்னஸ்’: கார்ல்சன் கணிப்பு
உலக நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் டாடா ஸ்டீல் செஸ் போட்டிக்காக மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா வந்துள்ளார். அவர் கூறுகையில் தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீரர் பிரக்யானந்தாவுக்கு, கடந்த சில மாதங்களில் இயல்புக்கு அதிகமாகவே அனுபவம் கிடைத்திருக்கும். அவரை விட சிறப்பாக அர்ஜுன் எரிகேசியும், குகேசும் கடந்த சில மாதங்களில் ஆடியுள்ளனர்’ என்றார். ‘பிரக்ஞானந்தாவின் வீக்னஸ், ஒவ்வொரு நகர்த்தலுக்கும் அதிக நேரம் எடுப்பதே. அதை சரி செய்து கொண்டால் சிறப்பாக ஜொலிக்க முடியும். வருங்காலத்தில் குகேஷ் எனக்கு போட்டியாக உருவெடுக்கும் வாய்ப்புள்ளது’ என்றும் அவர் கூறினார்.
* டெண்டுல்கரின் மகன் பந்து வீச்சில் சாதனை
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் (25), ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், அருணாச்சலப் பிரதேசம் அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கோவாவில் கோவா கிரிக்கெட் சங்க அகாடமி மைதானத்தில் நேற்று நடந்த டெஸ்ட் போட்டியில் கோவா சார்பில் பந்து வீச்சாளராக அர்ஜுன் களமிறங்கினார். 9 ஓவர்களை வீசிய அவர், 25 ரன் தந்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அர்ஜுன் பங்கேற்கும் 17வது முதல் தர கிரிக்கெட் போட்டி இது. மற்ற 16 போட்டிகளில், இதுவரை, 32 விக்கெட்டுகளை அர்ஜுன் வீழ்த்தி உள்ளார். 4/49 என்பதே அவரது சிறப்பான பந்து வீச்சாக இருந்தது.
* ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தோனிக்கு நோட்டீஸ்
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் முன்னாள் பங்குதாரர்களும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் இயக்குனர்களுமான மிஹிர் திவாகர் மற்றும் சவும்யா தாஸ், தங்களுக்கு எதிராக, தோனி தொடர்ந்த, ரூ.15 கோடி மோசடி வழக்கை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராகி தன் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி, தோனிக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.