×

வீட்டுமனையை அளவீடு செய்யாததை கண்டித்து பெட்ரோல் கேனுடன் பெண் போராட்டம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, காவித்தண்டலம் கிராமத்தில் குடும்பத்துடன் வசிப்பவர் காமாட்சி, மூங்கில் கூடைகள் செய்து, பிழைப்பு நடத்தி வருகிறார். பல ஆண்டுகளால வீடு இல்லாமல், மரத்தடி மற்றும் பள்ளி கட்டிடங்களின் நிழலில் வசித்து வந்த காமாட்சிக்கு, தமிழ்நாடு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ், ஓரக்காட்டுபேட்டை கிராமத்தில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்து, வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த, வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் வருவாய்த்துறையினர், அந்த இடத்தில் நிலம் அளவீடு செய்து, வீட்டுமனையினை ஒப்படைக்காமல் இருந்து வருகின்றனர்.

இதனால், வீடுகட்ட முடியாமல் காமாட்சி வழக்கம்போல் மரத்தடி மற்றும் பள்ளி கட்டிடங்களின் நிழலில் குடும்பத்தினருடன் தங்கி வருகிறார்.இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கின் முன்பு, காமாட்சி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், முறையாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், காமாட்சி அளித்த கோரிக்கை மனு மீது, தற்போது வரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட காமாட்சி நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்து, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் கூட்டரங்கின் முன்பு கையில் பெட்ரோல் கேனுடன் அமர்ந்து, அரசு வழங்கிய வீட்டுமனையை அளவீடு செய்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனைகண்ட, அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட காமாட்சியிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின்பேரில், காமாட்சி பெட்ரோல் கேனை போலீசாரிடம் கொடுத்தார். மேலும், பலமுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அரசு அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் சமாதானம் செய்து அனுப்புவதை மட்டுமே செய்து வருவதாக காமாட்சி கூறிவிட்டு, நம்பிக்கையுடன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

The post வீட்டுமனையை அளவீடு செய்யாததை கண்டித்து பெட்ரோல் கேனுடன் பெண் போராட்டம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Collector ,Kanchipuram ,Kamatshi ,Kavithandalam ,Uthramerur taluk ,Kanchipuram district ,Kamakshi ,Tamil Nadu government ,
× RELATED கருணை தெய்வம் காமாட்சி