×

கருணை தெய்வம் காமாட்சி

இந்த நாமத்தின் பெயரே காமாட்சி. எல்லோருக்கும் தெரிந்த நாமம் இது. ஸுமேரு மத்யஸ்த ஸ்ருங்கஸ்தா… மந் நகர நாயிகா… என்று தொடங்கி ஸுதா சாகர மத்யஸ்தா என்று பார்த்தோம். இதில் ஸுதா சாகரத்தைப்பற்றி பார்க்கும்போது பிரத்யட்சமான ஸுதா சாகரம் என்று காஞ்சிபுரத்தைப் பார்த்தோம். காஞ்சிபுரத்தை பிரத்யட்சமான ஸுதா ஸாகரமாக பார்த்தோமெனில், அங்கு இருக்கக் கூடிய அம்பிகையினுடைய நாமம்தானே அடுத்து வரமுடியும். ஸுதா சாகரம்தான் காஞ்சிபுரம் எனில், அந்த ஸுதா சாகரத்திற்கு மத்தியில் யார் இருக்கிறாளோ அவளுடைய நாமத்தைத்தான் வசின்யாதி வாக் தேவதைகள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். காமாட்சி என்கிற பெயருக்கான விசேஷம் என்ன என்பதை பார்க்க வேண்டும். நாம் ஆன்மிகத்தின் முதல் படியில் இருப்போமானால், நாம் என்னென்ன வேண்டிக் கொள்கிறோமோ அதெல்லாம் கிடைக்க வேண்டும்.

இது சாமானியமனிதர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் வேண்டிக் கொள்வதுதான். முதல் படியில் தொடங்கி ஞானத்தையும் முக்தியையும் வேண்டும் முமூட்சுக்கள்(தீவிர ஜான சாதகர்கள்) வரை இதுதானே உண்மை. நாம் என்ன கேட்கிறோமோ அதை பிரசாதிக்கக் கூடியவள்தான் காமாட்சி. நாம் என்ன கேட்கிறோமோ அதை எந்தவித தடையுமில்லாமல் கொடுப்பவளே காமாட்சி. இந்த காமாட்சி என்கிற இந்த நாமத்தைச் சொல்லும்போது, ஒரு குழந்தை தாயிடம் உரிமையோடு கேட்பதுபோல் கேட்கலாம் அதை எப்படி கொடுக்க வேண்டுமோ அப்படி கொடுப்பாள். அதில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம். நாம் கேட்பதையெல்லாம் கொடுப்பதால் அவளுக்கு காமாட்சி என்கிற பெயர் ஏன் இருக்கிறது என்று பார்த்தால், இந்தக் காமாட்சி என்கிற நாமாவை பிரித்துப் பார்த்தால் காம அக்ஷி என்று பார்க்கலாம். இப்போது இந்த காம என்கிற சப்தம் இருக்கிறதல்லவா… இந்த வார்த்தைக்கு வெவ்வேறு விதமான அர்த்தங்கள் இருக்கிறது.

நாம் முதலில் காம என்கிற வார்த்தைக்கு அடிப்படையான அர்த்தத்தை பார்க்கலாம். அதற்கடுத்து அதை அடுத்து அதைவிட சூட்சுமமான அர்த்தத்தை பார்க்கலாம். அதற்கும் அடுத்து லட்சியார்த்தத்தையும் பார்க்கலாம். இப்போது அடிப்படையாக இந்த வார்த்தையின் அர்த்தம் என்ன? காம என்கிற வார்த்தைக்கு அடிப்படை அர்த்தம் என்னவெனில், ஆசை என்பதாகும். இதற்கு அடுத்து கொஞ்சம் சூட்சுமமான நடுத்தரமான அர்த்தம் இருக்கிறது. இந்த நடுத்தரமான அர்த்தம் என்னவெனில், காம என்றால் மன்மதன் என்று பொருள். இதுவும் எல்லாருக்கும் தெரியும். இதையெல்லாம் தாண்டி மூன்றாவதாக ஒரு அர்த்தம் இருக்கிறது. காம என்கிற சப்தத்திற்கு உயர்ந்த ஒரு அர்த்தம், உத்தமமான அர்த்தம் ஒன்று இருக்குமல்லவா… அது என்னவெனில் பகவான் காமேஸ்வரன் என்று அர்த்தம். முதலில் காம என்றால் ஆசை என்று பார்த்தோம். நடுவில் மன்மதன் என்று பார்த்தோம். அதற்கடுத்து உத்தமமான அர்த்தம் காமேஸ்வரன். ஏன், காமேஸ்வரனாகிய பகவான் எனில், க – அ – ம. முதலில் க என்ற எழுத்து.

அதற்கு அடுத்து அ கார சப்தம் சூட்சுமமாக இருக்கிறது. பிறகு மகார சப்தம் இருக்கிறதல்லவா. இப்போது இந்த க என்பது பிரம்மாவையும், அ என்பது விஷ்ணுவையும், ம என்பது ருத்ரனையும் குறிக்கும். இந்த அகார, உகார, மகாரமாக இருக்கக் கூடிய பிரம்மாவையும் விஷ்ணுவையும் ருத்ரனையும் தாண்டி, சதுர்த்தம் என்கிற நான்காவது நிலையில் எவன் இருக்கிறானோ அவன் காமேஸ்வரன். காம என்றால் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் செய்யக் கூடியவனாக அதையெல்லாம் கடந்து நிற்கக்கூடியவன் எவனோ அவனே காமேஸ்வரன். அவன் தலைவனாக இருப்பதால் ஈஸ்வரன். அவனுக்கு காமன் என்று பெயர். காமனாகவும் இருக்கிறான், அதே நேரத்தில் ஈஸ்வரனாகவும் இருக்கிறான். அதனால் அவனுக்கு காமேஸ்வரன் என்று பெயர். மிகவும் கீழ் தளத்தில் இதனுடைய அர்த்தத்தை பார்த்தால் காமன் என்றால் மன்மதன். அதையும்விட கீழேயுள்ள தளத்தில் பார்த்தால் காமம் என்றால் ஆசை என்று பொருள். ஆனால், அதே விஷயத்தை மிக மிக உயர்ந்த தளத்தில் வைத்துப் பார்த்தால் காமேஸ்வரன் என்று பார்க்கிறோம்.

காம என்கிற சப்தத்திற்கு மூன்று அர்த்தம் பார்த்து விட்டோம். இதில் அக்ஷி என்பதை பார்ப்போம். அக்ஷி என்றால் கண்களை உடையவள் என்று அர்த்தம். காம அக்ஷி என்று சொல்லும்போது வெளிப்படையான அர்த்தம் என்ன வெனில், அழகிய கண்களை உடையவள் என்று அர்த்தம். தன்னை நாடிவரக் கூடிய ஆசைகளை தன்னுடைய கண்களினாலேயே, தன்னுடைய கடைக்கண் பார்வையினாலேயே நிறைவேற்றி வைப்பதாலேயே அவளுக்கு காமாக்ஷி. அதாவது ஆசை என்கிற அர்த்தத்தை வைத்துப் பார்த்தால், நாம் அம்மாவிடம் செல்கிறோம் கேட்கிறோம். அதை அவளுடைய கடைக்கண் பார்வையினாலேயே நிறைவேற்றி வைக்கிறாள். இது முதல் அர்த்தம். காம என்கிற சப்தத்திற்கு இரண்டாவது அர்த்தம் என்ன பார்த்தோமெனில், மன்மதனை தன்னுடைய கண்களினாலேயே கட்டுப்படுத்துபவள் எவளோ அவளே காமாட்சி. மன்மதனை சாதாரணமாக விட்டால் அவன் உயிர்களின் மனதை கலங்கடித்துக் கொண்டே இருப்பான்.

அதனால்தான் அவனுக்கு மன்மதன் என்று பெயர். அப்போது அம்பாள் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோதாணம் என்கிற சக்தியாக இருந்து இந்த மன்மதனை ஒரு பார்வை பார்த்தால் அவன் இந்த உயிர்களுக்குள் ஆசையை உண்டு பண்ணி இந்த சிருஷ்டி நடப்பதற்கு உதவி புரிவான். அதே மன்மதனை அம்பிகை அனுக்கிரக சக்தியாக மாறி ஒரு பார்வை பார்த்தால், எந்த பிரபஞ்சத்தை நடத்த உதவி புரிந்த மன்மதன் இப்போது மொத்தமாக இந்த பிரபஞ்ச விஷயத்தை மூடி வைத்துவிட்டு பஞ்சதசாக்ஷரி ஜபத்தில் உட்கார்ந்து விடுவான். அப்போது, ஒரு பக்கம் திரோதாண சக்தியாக இருந்து மன்மதனை பார்த்தால் இந்தப் பிரபஞ்சம் நடக்கும். இன்னொரு பக்கம் அனுக்கிரக சக்தியாக இருந்து மன்மதனை பார்த்தால், பிரபஞ்சம் முடிந்து மோட்சம் சித்திக்கும். ஒருபக்கம் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஆசைகளை நிறைவேற்றி வைப்பதால் அவள் காமாட்சியாக இருக்கிறாள்.

அதே காமாட்சி திரோதாண சக்தியைக் கொண்டு, இந்த சாதகன் பக்குவப்பட்டு விட்டான். இவனுக்கு முமூட்சுத்துவம் வந்து விட்டது. இவன் மோட்ச சாதனைக்குரிய அதிகாரியாக இருக்கிறான். ஞானத்திற்குரியவனாக இருக்கிறான் என்று அம்பிகை பார்க்கிறாள். இப்போது அம்பிகையின் அனுக்கிரக சக்தியால் இதே மன்மதன் பிரபஞ்சத்தை மூட்டை கட்டி வைத்து ஞானப் பிரதானத்திற் குரியவனாக மாறி அம்பிகையின் முன்பு அமர்ந்து விடுகின்றான். அப்போது முக்கியமாக ஒரு விஷயம் நடக்கிறது. மன்மதனுடைய சேஷ்டைகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. இந்த ஞானத்தையும் மோட்சத்தையும் அடையவிக்கக் கூடியவளும் காமாட்சிதான். சாதாரணமாக மக்கள் கேட்கக்கூடிய ஆசைகளை நிறைவேற்றி வைப்பவளும் காமாட்சிதான். இந்தப் பிரபஞ்சத்தை நிர்வாகம் செய்பவளும் காமாட்சிதான். இந்தப் பிரபஞ்சம் என்கிற screen ஐ மொத்தமாக விலக்கிவிட்டு, ஞானத்தையும் மோட்சத்தையும் பிரதானமாக பிரசாதிக்கிறவளும் காமாட்சிதான்.

அதனால்தான் அவள் இருக்கக்கூடிய ஸ்தானத்திற்கு காமகோடி என்று பெயர். ஏன் காமகோடி என்று பெயர் தெரியுமா? புருஷார்த்தங்கள் மொத்தம் நான்கு. அதில், தர்மம், அர்த்தம், காமம் போன்றவை முதல் மூன்று. காமம் என்கிற புருஷார்த்தத்தினுடைய கோடியில்… கோடி என்றால் கடைசி என்று பெயர். நன்கு கவனிக்க வேண்டும். காமம் எங்கு முடிகிறதோ…, (where the kaama ends… there is moksha… ) இங்கு நான்காவது ஸ்தானமாக மோட்சமாக இருக்கிறது. அந்த மோட்சத்தை தரக்கூடியவளாக இருப்பதால், அவள் காமகோடியில் அமர்ந்திருக்கிறாள். காமகோடியில் உட்கார்ந்து மோட்சம் தருகிறாள் என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நம்முடைய அன்றாட வேலையை நடத்த வேண்டுமல்லவா… அப்போது நமக்கு கோடி காமம் வருகிறதல்லவா. கோடி ஆசைகள் வருகிறதல்லவா… இப்படியாக காமாட்சியை கோடி கோடியான பக்தர்கள் வேண்டுகிறார்கள். கோடி கோடியான பக்தர்களின் கோடி கோடி ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பதால், அவள் காமகோடியில் இருக்கிறாள்.

மூன்றாவதாக காம என்றால் காமேஸ்வரனாகிய பகவான் என்றொரு அர்த்தம் பார்த்தோம். அம்பாள் செய்யக்கூடிய இரண்டு விஷயங்கள் இருக்கிறதல்லவா. ஒரு பக்கம் பிரபஞ்ச நிர்வாகம். இன்னொரு பக்கம் மோட்சத்தை அளிக்கிறாள். இந்த இரண்டையும் அவள் யாருடைய திருப்திக்காக, யாருடைய சந்தோஷத்திற்காக செய்கிறாள் எனில், தன்னுடைய பதியாக இருக்கக் கூடிய ஆத்ம சொரூபமாக இருக்கக் கூடிய காமேஸ்வரனுடைய சந்தோஷத்திற்காக காமேஸ்வரனுடைய திருப்திக்காகத்தான் இதெல்லாம் செய்கிறாள். இந்தக் காமேஸ்வரனை தன்னுடைய கண்ணுக்குள் கண்ணாக கண்மணியாக வைத்துக் கொண்டிருப்பதால் அவள் காமாட்சி. அவள் இதையெல்லாம் செய்துவிட்டு ஒரு பார்வை பார்த்தால், சுவாமி வந்து அவளை ஒரு பார்வை பார்க்க வேண்டும். சுவாமி திருப்தியாக வேண்டும். சுவாமிக்கு என்ன தெரியுமா அம்பாள் திருப்தி ஆக வேண்டும்.

சிவசக்தி சொரூபத்தில், ஆத்ம சொரூபமாக இருக்கக் கூடிய காமேஸ்வரனும், ஆனந்த சொரூபமாக இருக்கக் கூடிய காமேஸ்வரியும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? ஆனந்தம் என்ன நினைக்கிறதெனில் ஆத்மா திருப்தியாக வேண்டுமென்று நினைக்கிறது. ஆத்மா என்ன நினைக்கிற தெனில் ஆனந்தம் திருப்தியாக வேண்டுமென்று நினைக்கிறது. உண்மையிலேயே ஆத்மா வேறு. ஆனந்தம் வேறு அல்ல. ஆத்மாவும் ஆனந்தமும் ஒன்றுதான். அதுதான் ஆத்மானந்தம். ஆத்மானந்தம்தான் காமேஸ்வர காமேஸ்வரி சொரூபம். காமேஸ்வரனுடைய ப்ரீதிக்காக (விருப்பத்திற்காக) எல்லாம் செய்வதால் காமாட்சியாக இருக்கிறாள். அப்படி இருப்பவள் எங்கு இருக்கிறாள் எனில், தர்ம அர்த்த காமங்களை தாண்டிய காமகோடியில் இருக்கிறாள். அவளால்தான் மோட்சத்தை தர முடியும். அவளே காமாட்சியாக இருக்கிறாள்.
(சுழலும்)

ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா

 

The post கருணை தெய்வம் காமாட்சி appeared first on Dinakaran.

Tags : Kamakshi ,Sumeru ,Kanchipuram ,Sudha Sagar ,Mercy ,Kamatshi ,
× RELATED காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை வசூல் ₹57.36 லட்சம்