×

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்: அமைச்சர் எ.வ.வேலு பரிசுகளை வழங்கினார்

சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா, மூத்தப் பத்திரிகையாளர்கள் என்.ராம், நக்கீரன் கோபால், சென்னை பத்திரிகையாளர் மன்ற தலைவர் சுரேஷ் வேதநாயகம், பொதுச்செயலாளர் மு. ஆசீப், உள்பட பல்வேறு பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து விழாவை தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதன் பின்னர் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக நடைபெற்ற கபடி போட்டியில் முதல் இடம் பிடித்த தினகரன் அணிக்கு ரூ.50 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்த எம்யூஜே அணிக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த சன் டிவி அணிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நடிகர் துருவ் விக்ரம் மற்றும் தொழிலதிபர் சிபி ரவிலா ஆகியோர் வழங்கி பாராட்டினர். தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: விளையாட்டுக்கு மாநில அரசாங்கம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட ஆட்சி அமைந்தவுடன் விளையாட்டுத்துறைக்காக நிதிநிலை அறிக்கையில் அதிகமாக பணம் ஒதுக்குகிறோம். விளையாட்டுத்துறைக்கு இந்தியாவிற்கே தமிழ்நாடு தான் தலைமை இடமாக திகழ்கிறது

உயர்கல்வி படிக்கும் போது நான் கபடி விளையாடியுள்ளேன். பகுத்தறிவு விளையாட்டு என்றால் கபடி தான். தொட்டால் தீட்டு என சொல்லும் நிலையில் இந்த விளையாட்டை தொட்டால் தான் விளையாட முடியும். ஒத்துழைப்பை இந்த சங்கத்திற்கு தருவேன் என்று உறுதி அளிக்கிறேன். தோல்வி வரும்போதெல்லாம் துவண்டு விடக் கூடாது. தோல்வி என்பது வெற்றியின் படிக்கட்டு. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Pongal festival ,Chennai Press Club ,Minister ,E.V. Velu ,Chennai ,Pongal ,Madras High Court ,Judge ,A.T. Jagathees Chandra ,N. Ram ,Nakkheeran Gopal ,President ,Suresh Vedhanayakam ,General Secretary ,M. Asif ,
× RELATED கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு...