- துணை முதல்வர்
- உதயநிதி ஸ்டாலின்
- தமிழர் தினம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- துணை
- உதயநிதி ஸ்டாலின்
- சுற்றுப்புறத் தமிழ் நலன் மற்றும் மறுவாழ
- தமிழ் மின் கல்வி பல்கல
- நந்தம்பக்கம் பிஜினெஸ் செண்டர்
- அண்டை தமிழ் நாள்-2026 திருவிழா
சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம்-2026 விழாவில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையும் தமிழ் இணையக் கல்விக்கழகமும் இணைந்து வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த இளஞ்சிறார், சிறார், இளையோருக்கு இணையவழியில் நடத்திய பேச்சு, ஒப்புவித்தல், மாறுவேடம், கதை சொல்லுதல் ஆகியப் போட்டிகளில் வெற்றிபெற்ற 15 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை காசோலைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அயலகத் தமிழர் தின விழா மலரை வெளியிட அதனை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு அரசின் சார்பாக, ரூபாய் பத்து லட்சம் மதிப்பிலான இசை கருவிகளை மொரிஷியஸ் நாட்டிற்கு வழங்குவதற்கு சான்றாக ஒரு வீணையினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மொரிஷியஸ் நாட்டின் பிரதிநிதி மலையப்பனிடம் வழங்கினார்.
முன்னதாக அயலகத் தமிழர் தினம்- 2026 விழாவினையொட்டி அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கத்தினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்து, பார்வையிட்டார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழ் என்கின்ற அடையாளத்துக்கு முன்னால், வேறு எந்த அடையாளமும் நிற்க முடியாது, உலகெங்கும் வாழக் கூடிய தமிழர்களை ஒருங்கிணைக்கக்கூடிய பணி மிக முக்கியமானது.
அவர்களுடைய நலன்களை பாதுகாக்கின்ற பணி மிக, மிக முக்கியம். குடும்பத்தோடு வெளிநாடுகளில் வசிக்கும் போது, தமிழ்நாட்டில் இருந்து இன்னும் அதிகமான எதிர்பார்ப்புகள் நமக்குள் உருவாகும். அதை உணர்ந்து தான், நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அயலகத் தமிழர் நல வாரியத்தை முதன் முதலாக தொடங்கி வைத்தார். இதில் இன்றைக்கு சுமார் 32 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றீர்கள்.
இதன் மூலம் அயலகத் தமிழர்களுக்கு பல்வேறு முன்னெடுப்புகளை நம்முடைய திராவிட மாடல் அரசு, நம்முடைய முதல்வர் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். இந்த வாரியம் உங்களுக்கு பல உதவிகள் செய்தாலும், அரசின் சார்பாகவும், அயலகத் தமிழர்களுக்கு கொடுக்கப்படுகின்ற அடையாள அட்டை என்பது ஒரு மிகச் சிறந்த
உதாரணம். இந்த அடையாள அட்டை என்பது உங்களுடைய தாய்வீட்டு அடையாளம்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, நம்முடைய முதல்வர் வெளிநாடுகளுக்கு போகும்போது அங்கு இருக்கக்கூடிய அயலகத் தமிழர்களை உங்களையெல்லாம் தொடர்ந்து சந்தித்து வருகிறார். அப்படி சந்திக்கும்போது நம்முடைய முதல்வர் உங்களுக்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கிறார். வெளிநாடுகளில் பல உயரங்களை அடைந்திருக்கக்கூடிய தமிழர்கள் நீங்கள், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குகின்ற வகையில் முதலீடு செய்ய வேண்டும்.
அந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த வேண்டுகோளை முதல்வர் தொடர்ந்து உங்களிடத்தில் வைக்கின்றார். இன்றைக்கு முதல்வர் வைத்த வேண்டுகோளின் தொடர்ச்சியாக, உங்களுடைய முயற்சியின் தொடர்ச்சியாக இந்தியாவிலேயே நம்பர் ஒன் பொருளாதார வளர்ச்சியுள்ள மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு உயர்ந்து இருக்கின்றது. அந்த சாதனையில் உங்களுடைய பங்கு மிகப் பெரியது. நாம் அனைவரும் சேர்ந்து இந்த வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு நாம் எடுத்து கொண்டு போக வேண்டும்.
பொருளாதாரத்தில் நாம் வளருகின்ற அதேநேரத்தில், நம்முடைய மொழியையும், கலாசாரத்தையும், பண்பாட்டையும் மறந்துவிடக் கூடாது. உங்களுடைய குழந்தைகளுக்கு, அடுத்த தலைமுறைக்கு தமிழ்நாட்டினுடைய அடையாளத்தை சொல்லித் தருவது மிக,மிக முக்கியம். உங்களுடைய தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் ஏற்ற திட்டங்களை நம்முடைய முதல்வர் நிச்சயம் தீட்டி செயல்படுத்துவார். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், சா.மு.நாசர், எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, சல்மா, தமிழ்நாடு அயலக தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் மா.வள்ளலார், கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஜூவனிதா நாதன்,
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.ராதாகிருஷ்ணன், மலேசியா நாட்டின் முன்னாள் துணை அமைச்சர் பி.கமலநாதன், இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கை வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா, சிங்கப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.தினகரன், தென்ஆப்பிரிக்கா டர்பன் நகர முன்னாள் துணை மேயர் லோகநாதன் (லோகி),
அமெரிக்கா மேரிலாண்ட் மாகாண முன்னாள் துணை செயலாளர் மற்றும் போக்குரத்து ஆணையர் ராஜன் நடராஜன், மைக்ரோசாப்ட் நிறுவன ஏஐ பிளாட்பார்ம் முதுநிலை இயக்குநர் அருண் ஸ்ரீனிவாசன், இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு ஜென்னிங் கன்டெய்னர் தொழில் இயக்குநர் விமலா ஜென்னிங்ஸ் உள்பட வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
