சென்னை: கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை கரூரில் தற்காலிக அலுவலகம் அமைத்து சிபிஐ விசாரித்து வருகிறது. வேலுசாமிபுரத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள், தவெக நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் தவெக பொது செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை பொது செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரை டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். கரூர் கலெக்டர் தங்கவேல், எஸ்பி ஜோஸ் தங்கையா ஆகியோரும் டெல்லி சென்று சிபிஐ முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்த வழக்கின் அடுத்தகட்டமாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு இன்று காலை 11 மணியளவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக தவெக தலைவர் விஜய் இன்று காலை டெல்லி செல்கிறார். இதற்காக விஜய்க்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கும்படி டெல்லி மாநகர காவல் ஆணையரிடம் தவெக தரப்பில் கோரிக்கை விடுத்தது.
ஒன்றிய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறைகள் அடிப்படையில் டெல்லி விமான நிலையத்தில் இருந்து விஜய் செல்ல உள்ள அனைத்து பகுதிகளிலும் முழு பாதுகாப்பு வழங்க டெல்லி காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளது. விஜய்யின் தனி பாதுகாவலர்கள் தவிர ஒன்றிய ரிசர்வ் படை மற்றும் டெல்லி காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
