தருமபுரி: தொப்பூர் அருகே பைக், கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதி மலைப்பகுதிக்குள் செல்ல கூடிய தேசிய நெடுஞ்சாலையாகும். இப்பகுதியில் விபத்துகள் அதிகளவு ஏற்படுவதால் 900 கோடி மதிப்புள்ள பாலங்கள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. பாலங்கள் கட்டும் பணிக்காக அந்த பகுதி ஒருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் நோக்கி செல்ல கூடிய கனரக வாகனம் முன்னாள் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சுமார் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ள 3 பேர் படுகாயம் அடைந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்தும், உயிரிழந்தவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
