×

‘நேட்டோ’ கனவை கைவிடுகிறார் ஜெலன்ஸ்கி; உக்ரைன் – ரஷ்யா போர் மேகம் விலகுகிறது: கிறிஸ்துமஸ் தினத்திற்குள் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து

பெர்லின்: உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவது தொடர்பாக ஜெர்மனியின் பெர்லின் நகரில் நேற்று மிக முக்கிய உச்சி மாநாடு நடைபெற்றது.

இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பியத் தலைவர்கள் கலந்து கொண்டு நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்திற்குப் பிறகு பேசிய டிரம்ப், ‘உக்ரைன் அதிபர் மற்றும் ஐரோப்பியத் தலைவர்களுடன் மிகச் சிறந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. போர் நிறுத்த ஒப்பந்தம் முன்னெப்போதையும் விட தற்போது சாத்தியமாகியுள்ளது’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இந்த ஆலோசனையின் முக்கிய திருப்பமாக, நேட்டோ அமைப்பில் இணையும் தனது நீண்டகால கோரிக்கையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முதல் முறையாகக் கைவிடச் சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அனைத்து நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்ற நேட்டோவின் ‘பிரிவு 5’ போன்ற சட்டப்பூர்வமான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட உள்ளது.

மேலும், அமைதியை நிலைநாட்ட ஐரோப்பியத் தலைமையிலான பன்னாட்டுப் படைகளை உக்ரைனில் நிறுத்தவும், 8 லட்சம் வீரர்களைக் கொண்ட ராணுவத்தைப் பராமரிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. டான்பாஸ் பிராந்தியத்தைக் கைவிடுவது தொடர்பாகச் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், வரும் கிறிஸ்துமஸ் தினத்திற்குள் இந்த அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : Zelensky ,NATO ,Ukraine ,Russia ,Christmas Day ,BERLIN ,US ,PRESIDENT ,TRUMP ,Germany ,
× RELATED ஐபிஎல் மினி ஏலம்: ரூ.13 கோடிக்கு...