- பூந்தமல்லி-பொரூர் மெட்ரோ ரயில் சேவை
- பிரதமர் மோடி
- சென்னை
- நரேந்திர மோடி
- பூந்தமல்லி
- போரூர்
- மெட்ரோ ரெயில்
சென்னை : சென்னை பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. மெட்ரோ சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் மாதாவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ தொலைவிற்கு நடைபெற்று வருகின்றன. இதில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள வழித்தடமான 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான ஆளில்லா மெட்ரோ ரயில் சேவையின் 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. பூந்தமல்லி-போரூர் மெட்ரோ 6 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்க சிஎம்ஆர்எல் திட்டமிட்டுள்ளது. டெல்லி மெட்ரோ இதனை நிர்வகிக்க இருக்கிறது. இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ளவுள்ளார். ஏற்கனவே, தமிழகத்துக்கு பிரதமர் மோடி வருகின்ற ஜனவரி மாதம் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், பொங்கல் விழா, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
