×

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது : வக்பு வாரியம் தரப்பு வாதம்

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது என்று திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் வக்பு வாரியம் தரப்பு வாதிட்டுள்ளது. மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்புக்கு எதிராக அறநிலையத்துறை மற்றும் மதுரை கலெக்டர் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின் போது, அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் தாங்கள் அறிய விரும்புவதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார். இதையடுத்து. தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தரப்பில் வழக்கறிஞர் முபின் தனது வாதங்களை முன்வைத்தார்.

அதில், “1920ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி மலைமேல் உள்ள பகுதி தர்காவுக்கு சொந்தமானது. நெல்லித்தோப்பு முதல் மலை உச்சிவரை படிக்கட்டு உள்ள பகுதிகளும் தர்காவுக்கு சொந்தம் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீபத்தூண் என கூறப்படும் தூண், தர்கா இடத்தில்தான் உள்ளது. மலை உச்சியில் தீபம் ஏற்றுவது கோவில் மரபு அல்ல என்பது 1862லேயே உறுதி செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி பழைய தீர்ப்புகளில் உறுதிசெய்யப்பட்ட தரவுகளை எல்லாம் கருத்தில் கொள்ளவே இல்லை. மலை உச்சியில் தர்கா இருப்பதால்தான் அது சிக்கந்தர் மலை என அழைக்கப்படுகிறது. தர்கா அருகே தொழுகை நடந்து வருகிறது; அதுவும் ஒரு வழக்கமாகவே பின்பற்றப்படுகிறது. தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவில், தர்கா நிர்வாகத்திற்கு உடன்பாடு இல்லை. தர்கா முழுவதும் சர்வே செய்ததற்கான ஆவணங்களை நாளை தாக்கல் செய்கிறோம். உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய உரிமையை தர்காவுக்கு அளித்து உறுதி செய்ய வேண்டும்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Tags : Thiruparangundaram ,Kaldun Targa ,Wakpu Board ,MADURAI ,KALTUN DARGA ,Thirupparangunaram hill ,
× RELATED ஐபிஎல் மினி ஏலம்: ரூ.13 கோடிக்கு...