எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: அதானி விவகாரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!!

டெல்லி: அதானி விவகாரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 3ம் நாள் அமர்வு இன்று காலையில் தொடங்கிய நிலையில் முடங்கியது. இன்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்க இருந்த நிலையில் அவையில் அதானி பங்கு சந்தை சரிவு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர். அதானி குழும விவகாரம் தொடர்பாக உடனடியாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின. எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல், அதானி குழும விவகாரம் தொடர்பாக உடனடியாக விவாதிக்க கோரி மக்களவையில் திமுக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் முழக்கம் எழுப்பினர்.

அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை எனவும் எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால், சபாநாயகர் அனுமதி மறுத்ததால் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: