ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட சிம்பொனி

கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலனால் கருத்தாக்கம் செய்யப்பட்ட ‘த்ரிபின்னா’ என்ற இந்திய சிம்பொனி இசை ஆல்ப‌த்தை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். ஸ்வரங்களை வரிசையாக இசைக்காமல், அவற்றை பிரித்து, பிறகு ஒன்றிணைக்கும் பழங்கால கர்நாடக இசைக்கருத்தில் இருந்து இது உருவாக்கப்பட்டது. ஆரம்பகால கமகம் கருத்துகளில் வேரூன்றிய இந்த ஆல்பம், ஒரு ராகத்திற்குள் பல ஸ்வரங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதை ஆராய்ந்து, இந்திய பாரம்பரிய சூழலில் விரிவான இசை அமைப்புகளை உருவாக்குகிறது.

இந்த அணுகுமுறையின் மூலம், இந்த ஆல்பம் ராகத்தின் வெளிப்பாட்டு எல்லையை விரிவுபடுத்துகிறது. பாரம்பரியமும், கற்பனையும் ஒரு இசைக்களத்தில் இணையும் இந்திய சிம்பொனியை உருவாக்குகிறது. ‘த்ரிபின்னா’ ஆல்பத்திலுள்ள இசை அமைப்புகளை ஏ.ஆர்.ரஹ்மான் முன்பு கணேஷ் ராஜகோபாலன் வாசித்தார். ஸ்வரயோகா குழுவினருடன் இணைந்து அனிருத்தா பட் மிருதங்கம் வாசித்தார். அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் கிடைக்கும் இந்த ஆல்பத்தில் கணேஷ் ராஜகோபாலனின் மாணவர்களான ஸ்வரயோகா குழுவினர் மற்றும் பத்ரி சதீஷ் குமார், ஓஜஸ் ஆத்யா, திருச்சி கிருஷ்ணசாமி, சுவாமிநாதன் செல்வ கணேஷ் பங்காற்றியுள்ளனர்.

Related Stories: