மும்பை: விழாவில் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் நடிகை பலக் திவாரியை அவரது பவுன்சர் ஒருவர் அலேக்காக தூக்கிக் கொண்டு மேடையில் கொண்டு போய் விட்ட சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் திகில் மற்றும் நகைச்சுவை திரைப்படமான ‘தி பூத்னி’-யின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகை பலக் திவாரி வந்தார். விழா நடைபெறும் இடத்திற்கு சிறிது தொலைவுக்கு முன்பாக தனது காரில் பலக் திவாரி வந்திறங்கியபோது, அவரை பெரும் ரசிகர் கூட்டம் சூழ்ந்து கொண்டது.
அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால், அவரது பவுன்சர்களில் ஒருவர், பாலக் திவாரியை காரில் இருந்து அலேக்காக தூக்கிக் கொண்டார். பின்னர் பவுன்சர்கள் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கூட்டத்தைத் தாண்டி நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு பலக் திவாரியை தூக்கியவாறே கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேடையில் இறக்கிவிட்டனர். இந்தக் காட்சி, அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலானது.