ஐதராபாத்: பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்திலிருந்து பாகிஸ்தான் நடிகையை நீக்க வேண்டும் என ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ என்ற பான் இந்தியா படத்தில் இமான்வி இஸ்மாயில் என்ற மாடல் அழகி ஹீரோயினாக நடிக்கிறார். இவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்ற தகவல் பரவியது. உடனே அவரை படத்திலிருந்து நீக்கும்படி ரசிகர்கள் சோஷியல் மீடியா முழுவதும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
நமது நாட்டில் நுழைந்து அப்பாவிகளை கொன்ற நாட்டைச் சேர்ந்த யாருக்கும் சினிமாவிலும் வாய்ப்பு தரக்கூடாது என இமான்வியை கண்டித்து கருத்துகள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் இமான்வி கூறுகையில், ‘நான் பாகிஸ்தானை சேர்ந்தவள் அல்ல. எனது பெற்றோர் இந்தியர்கள்தான். நான் பிறப்பதற்கு முன்பே அவர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆனார்கள். நான் பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவில்தான். நான் அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்தான்’ என விளக்கம் தந்துள்ளார்.