துபாய்: துபாயில் நடந்த கார் ரேஸ் பயிற்சியின்போது அஜித் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, பைக்கில் உலக பயணம் மேற்கொண்டிருக்கிறார் அஜித் குமார். படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் பைக் எடுத்துக்கொண்டு அவர் வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் பயணம் மேற்கொள்கிறார். அத்துடன் இப்போது மீண்டும் கார் ரேஸில் பங்கேற்க உள்ளார். புதியதாக `அஜித்குமார் ரேஸிங்’ என்ற குழுவையும் கடந்தாண்டு தொடங்கியிருக்கிறார். துபாயில் இந்தாண்டிற்கான `24H Dubai’ கார் பந்தயம் ஜனவரி 10ம் தேதி தொடங்குகிறது. அதற்கான பயிற்சியை நேற்று துபாய் ஆட்டோடிரோம் ரேஸ் டிராக்கில் அஜித் தொடங்கினார்.
அப்போது அவர் ஓட்டிய கார் படு வேகமாக சென்று மைதானத்தில் இருந்த தடுப்பு ஒன்றின் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறானது. உடனே மீட்பு குழுவினர் ஓடிவந்து, கார் கதவை திறந்து அஜித்தை இறங்க வைத்தனர். இந்த விபத்தால் சற்றே தடுமாறிய அஜித், காயம் எதுவுமின்றி தப்பினார். அஜித்தின் கார் ரேஸ் விபத்தில் சிக்கிய தகவல் பரவியதும் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அஜித்குமார் ரேஸிங் டீம், விபத்து தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டது. ‘பயங்கர விபத்தாக காட்சி தரும் இதில், அஜித் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்’ என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.