கை, கால்கள் நடுக்கம்; பேச்சில் தடுமாற்றம்: விஷாலுக்கு என்ன ஆச்சு? சினிமா விழாவில் பரபரப்பு

சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், ஆர்யா, அஞ்சலி, வரலட்சுமி, சதா, சந்தானம், சோனு சூட் நடிப்பில் கடந்த 2013ல் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட படம் `மதகஜராஜா’. ஜெமினி பிலிம் சர்கியூட் தயாரித்தது. அப்போது அந்நிறுவனம் பல்வேறு பிரச்னைகளில் சிக்கியதால், ‘மதகஜராஜா’ திரைக்கு வராமல் இருந்தது. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொங்கலை முன்னிட்டு இப்படம் வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் விஷால், சுந்தர்.சி, குஷ்பு, விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிறகு பேச வந்த விஷால், கடுமையான வைரஸ் காய்ச்சல் காரணமாக அவதிப்படுவதாக படக்குழு தெரிவித்தது. அவரது கை, கால்களில் நடுக்கம் ஏற்பட்டது. நிற்க முடியாமல் அவரது உடல் குலுங்கியது. பேசும்போதும் தடுமாற்றம் இருந்தது. அவர் தலைக்கு சமீபத்தில் மொட்டை போட்டதுபோல் குறைந்த முடிகளுடனும், வீங்கிய உதடுகளுடனும் காணப்பட்டார்.

அவர் பேசும்போது, ‘‘மதகஜராஜா’ ஷூட்டிங்கில் ஒரு காட்சியில் சம்மர்சால்ட் அடிக்க வேண்டும். அப்போது எதிர்பாராவிதமாக எனக்கு தலையில் அடிபட்டது. உடனே ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தார்கள். உடற்பயிற்சிகள் செய்து என் உடலை சரியாக வைத்திருந்ததால், பயப்படும்படி எதுவும் நடக்கவில்லை என்று டாக்டர் சொன்னார். இல்லை என்றால், என் கதை அன்றே முடிந்திருக்கும்’ என்றார். இதுபோல் விஷால் பேசும்போது அவ்வப்போது பேச்சை நிறுத்தி நிறுத்தி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது ஒரு கண்ணிலிருந்து நீர் வடிந்தபடியே இருந்தது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், விஷாலுக்கு என்ன ஆச்சு? இது வெறும் வைரல் காய்ச்சல் போல் தெரியவில்லை என கமென்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில், விஷாலுக்கு வைரல் காய்ச்சல் தொற்று மட்டும்தான் என தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Related Stories: