சென்னை: ‘கோட்’ படத்தில் நடித்ததால் மன அழுத்தம் ஏற்படும் அளவுக்கு ட்ரோல் செய்யப்பட்டேன் என்றார் மீனாட்சி சவுத்ரி. தெலுங்கு படங்களில் நடித்து வந்த மீனாட்சி சவுத்ரி, தமிழில் விஜய் ஆண்டனியுடன் ‘கொலை’, ஆர்.ஜே.பாலாஜியுடன் ‘சிங்கப்பூர் சலூன்’ படங்களில் நடித்தார். அதன் பிறகு விஜய்க்கு ஜோடியாக ‘கோட்’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் மீனாட்சியின் நடிப்புக்கு பெரிதாக ஸ்கோப் இல்லாமல் இருந்தது. மேலும் படத்தில் அவர் இறந்துபோவது போல் காட்சி இருந்தது.
இதையடுத்து தொடர்ந்து அவரை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்து வந்தனர். இது குறித்து மீனாட்சி சவுத்ரி கூறும்போது, ‘கோட் படம் வௌியான பிறகு என்னை நிறையவே ட்ரோல் செய்தார்கள். இதனால் கவலை அடைந்தேன். ஒரு கட்டத்தில் மன அழுத்தத்திற்கு ஆளானேன். அதன் பிறகுதான் லக்கி பாஸ்கர் படம் வெளிவந்தது. அந்த படத்தால் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. பலரும் என்னை பாராட்டினார்கள். இனி கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்’ என்றார்.