×

இயக்குனர் ஏ.பீம்சிங் நூற்றாண்டு விழா: திரையுலகினர் புகழாரம்

சென்னை: தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களை எழுதி இயக்கியவர், ஏ.பீம்சிங். அவரது நூற்றாண்டு விழா, வி4 எண்டர்டெயின்மெண் ட்ஸ் மற்றும் சினிமா பேக்டரி சார்பில் கொண்டாடப்பட்டது. சிவகுமார், கே.பாக்யராஜ் தலைமை தாங்கினர். ஏ.பீம்சிங் உருவப் படத்தை விக்ரம் பிரபு திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். தயாரிப்பாளர்கள் தேவதாஸ், வி.சி.குகநாதன், அபிராமி ராமநாதன், இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், காரைக்குடி நாராயணன், சித்ரா லட்சுமணன், இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், பொதுச்செயலாளர் பேரரசு, சினிமா பேக்டரி நிறுவனர் ராஜேஷ், டைமண்ட் பாபு, ஏ.பீம்சிங் குடும்பத்தினர், எடிட்டர் பி.லெனின், ராதாரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சிவகுமார் பேசுகையில், ‘பீம்சிங் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு சாட்சி, அவரது குடும்பம். பீம்சிங்கிற்கு இவ்வளவு சீடர்கள் இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ‘பாசமலர்’ படத்தைப் பார்த்து விட்டு அழாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவருடன் ‘பாதபூஜை’ படத்தில் நான் பயணித்தேன். அவரைப் போன்ற சிரஞ்சீவி ஆட்கள், நாம் போனாலும் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள்’ என்றார். எஸ்.பி.முத்துராமன் பேசும்போது, ‘தமிழில் ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் பீம்சிங்கிடம் நான் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சரியாக பயன்படுத்தியவர். பல்வேறு 100 நாள் விழாக்களை கொண்டாடியுள்ள அவரது படங்களில், அவர் கையாண்ட எடிட்டிங் முறைகளை புதிய இயக்குனர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார். பிறகு கே.பாக்யராஜ் பேசுகையில், ‘நான் பீம்சிங்கை பார்த்தது இல்லை. ஆனால், திரைப்படங்களின் மூலமாக என் மனதில் அவர் ஆழமாகப் பதிந்துள்ளார்’ என்று சொன்னார்.

Tags : A. Beamsing Centenary Festival ,Chennai ,A. Beamsing ,V4 Entertainmentz ,Cinema Factory ,Sivakumar ,K. Bagyaraj ,
× RELATED ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்