பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன’சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்க, மாடலிங் துறையை சேர்ந்த நிரஞ்சனி கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக பல குறும்படங்களை இயக்கி நடித்தவர், திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் பெற்றவர். ‘அஸ்திரம்’ படத்தில் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் டிஎஸ்எம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இதன் கதையை எழுதியுள்ளார் கதாசிரியர் ஜெகன். இந்த படம் விறுவிறுப்பான துப்பறியும் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையை பைவ்-ஸ்டார் செந்தில் கைப்பற்றியுள்ளார். இவரது நிறுவனம் கடந்த சில மாதங்களில் தொடர்ந்து வெளியட்ட பார்க்கிங், மகாராஜா, கருடன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. ‘அஸ்திரம்’ படத்தின் கதையும், படமாக உருவாகி இருக்கும் விதமும் பைவ் ஸ்டார் செந்தில் அவர்களை ரொம்பவே ஈர்த்து விட்டது.
அந்தவிதமாக தற்போது அஸ்திரம் படத்தை தங்கள் பைவ்-ஸ்டார் நிறுவனம் மூலமாக இவர் வெளியிட இருப்பதால் இந்த நிறுவனம் வெளியிட்ட முந்தைய படங்கள் போலவே ‘அஸ்திரமும்’ ரசிகர்களின் வரவேற்பை பெறும் என்பது உறுதி. ஐரா, எட்டு தோட்டாக்கள், பொம்மை நாயகி ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
விரைவில் வெளியாக உள்ள ரேஞ்சர், ஜாக்சன் துரை ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கல்யாண் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, இறுதிச்சுற்று மற்றும் சூரரைப்போற்று படங்களில் துணை படத்தொகுப்பாளராக பணியாற்றிய பூபதி இந்த படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார். கலை வடிவமைப்பை ராஜவேல் கவனிக்க, சண்டைப் பயிற்சியாளராக முகேஷ் பொறுப்பேற்றுள்ளார். பிப்ரவரி 21 இல் உலகமெங்கும் பைவ் ஸ்டார் நிறுவனம் பிரம்மாண்டமாக “அஸ்திரம்” படத்தை வெளியிட உள்ளது.