கடந்த டிசம்பர் 30ம் தேதியுடன், சினிமாவில் நடிக்க வந்து 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த அவருக்கு 29 வயதாகிறது. 2016ல் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி நடித்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானார். அவர் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்று, ‘நேஷனல் கிரஷ்’ என்று அவரது ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறார்.
சினிமா மற்றும் விளம்பரங்களில் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் அவர், இந்தி ‘அனிமல்’ மற்றும் தெலுங்கு ‘புஷ்பா 1: தி ரைஸ்’, ‘புஷ்பா 2: தி ரூல்’ ஆகிய படங்களின் மூலம் உலகம் முழுவதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில், 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ராஷ்மிகா மந்தனா, ‘8 வருடங்கள் திரையுலகில் நான் செய்த எல்லாவற்றுக்கும் உங்கள் அன்பும், ஆதரவும்தான் காரணம். நன்றி’ என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவரது கைவசம் இந்தியில் ‘சிக்கந்தர்’, ‘சாவ்வா’, ‘தாமா’, தெலுங்கில் ‘தி கேர்ள் பிரெண்ட்’, தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தியில் ‘குபேரா’ ஆகிய படங்கள் இருக்கின்றன.