உடல் பருமன் பிரச்னைக்கு தீர்வு இயற்கை மருத்துவம் வழிகாட்டல்

மதுரை, ஆக. 4: மதுரை அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவப்பிரிவின் தலைமை டாக்டர் நாகராணி நாச்சியார் கூறியதாவது: இக்காலத்தில் ‘ஒபிசிட்டி’ எனும் உடல்பருமன் மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. மருந்து, மாத்திரைகள் தவிர்த்து வாழ்வியலோடு இணைந்து இதனை கட்டுப்படுத்தலாம். வாரம் ஒருமுறை உண்ணா நோன்பிருப்பது, தினமும் 30 நிமிடம் யோகா, காலை மாலையில் 30 நிமிடம் நடைப்பயிற்சி, தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்துதல், வாரம் ஒரு நாள் ஒரு வேளை சமைக்காத உணவை உட்கொள்வது, அதாவது கேரட், வெள்ளரி போன்றவற்றுடன் ஒரு பழம், தேங்காய் துண்டுகள், ஊறவைத்த முளைத்த பயறு வகைகளுடன், தேவை கருதி நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்வது போன்றவை பலன் அளிக்கும்.

இத்துடன் உணவு கட்டுப்பாடு நல்ல பலன் தரும். உடல் பருமனைக் குறைக்க, சம்பந்தப்பட்டவர்கள் ஆரோக்கிய உணவு பட்டியலை கையாள வேண்டும். அதாவது, காலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் தண்ணீர் 2 டம்ளர்.
7.30 மணிக்கு எலுமிச்சை சாறுடன் தேன் கலந்த நீர். 8 மணிக்கு சிறுதானிய உணவு வகைகள் (கம்பு தோசை, ராகி ஆகியவற்றால் உருவான இடியாப்பம், வரகு பொங்கல்). 11 மணிக்கு ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் ஒன்று சாப்பிடலாம்.

அடுத்ததாக மதியம் 1 மணிக்கு ஒரு கப் சாதம், ஒரு கப் காய்கறி, ஒரு கப் கீரை. மாலை 4 மணிக்கு ஹெர்பல் காபி அல்லது காய்கறி சூப். இரவு 7:30 மணிக்கு கோதுமை உணவுகளான தோசை, சப்பாத்தி போன்ற உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். இதனை நடைமுறைப்படுத்தி, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா போன்றவற்றையும் பின்பற்றுவது, நல்ல பலனைத் தரும். இவ்வாறு கூறினார்.

The post உடல் பருமன் பிரச்னைக்கு தீர்வு இயற்கை மருத்துவம் வழிகாட்டல் appeared first on Dinakaran.

Related Stories: