நெல்லை,ஜன.12: நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் இருந்து முனைஞ்சிப்பட்டிக்கு கேடிசி நகர் பணிமனையில் இருந்து 14ஏ அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் இருந்து ரெட்டியார்பட்டி, இட்டேரி, தாமரைசெல்வி, புதுக்குறிச்சி, பருத்திப்பாடு, மூலைக்கரைப்பட்டி, கீரன்குளம், முனைஞ்சிப்பட்டி மற்றும் நெல்லை, டவுன், பாளை, வண்ணார்பேட்டையில் வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணி செய்பவர்கள் வேலைக்கு வரவும், பணி முடிந்து இரவு 9 மணிக்கு திரும்பி செல்லவும் 14ஏ அரசு பஸ்சை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் இருந்து முனைஞ்சிப்பட்டிக்கு இயக்கப்பட்டு வந்த 14ஏ அரசு பஸ் இயக்கப்படாத நிலை இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் இரவு நேரம் பணி முடிந்து முனைஞ்சிபட்டிக்கு செல்ல முடியாத நிலை இருந்துவந்தது. இதனால் கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் வாகனங்களில் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் இருந்து முனைஞ்சிபட்டிக்கு இரவு நேர பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரனில் செய்தி வெளியிடப்பட்டது.
இதைதொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் இருந்து முனைஞ்சிபட்டிக்கு இரவு நேர பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு மூலக்கரைப்படி சுற்று வட்டார பயணிகள் மகிழ்ச்சி மற்றும் தினகரனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
