சேத்துப்பட்டு, ஜன.12: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா, மொடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்(25). இவரும் அதே ஊரைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர் விக்னேஷ்(16) என்பவரும் டூவீலரில் மட்டப்பிறையூர் கிராமத்திற்குச் சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
போளூர்–- சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில், மொடையூர் கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த விஜய், விக்னேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போளூர் போலீசார், இருவரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி தப்பிய காரை தேடி வருகின்றனர்.
