சென்னை: நாய் கடித்த பிறகு தாமதமாக சிகிச்சைக்கு வந்து தடுப்பூசி செலுத்தினாலும் உயிருக்கு ஆபத்துதான் என பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18 பேருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நாய் கடித்த இடத்தை முறையாக கழுவாமல் இருப்பது, தாமதமாக சிகிச்சைக்கு வருவது, தடுப்பூசி கால அட்டவணையை மீறுவது ஆகியவை உயிருக்கே ஆபத்தாக மாறும் என்று ரேபிஸ் சிகிச்சை குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியும் இரு சிறார்கள் உயிரிழப்பை அடுத்து, ரேபிஸ் சிகிச்சை வழிகாட்டுதலை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், நாய் கடித்த இடத்தை முறையாக கழுவாமல் இருப்பது, தாமதமாக சிகிச்சைக்கு வருவது, தடுப்பூசி கால அட்டவணையை மீறுவது ஆகியவை உயிருக்கே ஆபத்தாக மாறும். நாய்க்கடி ஏற்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி (ரேபிஸ் தடுப்பூசி) செலுத்துவது மிக முக்கியம். ரேபிஸ் வைரஸ் உடலில் பரவிய பிறகு, தாமதமாக சிகிச்சை எடுத்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். ஏனெனில் ரேபிஸ் ஒரு கொடிய நோயாகும், முழுமையாக அறிகுறிகள் தோன்றிய பிறகு சிகிச்சை பலனளிக்காது.
நடவடிக்கைகள்
முதலுதவி: கடிபட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் 10-15 நிமிடங்கள் நன்கு கழுவவும்.
மருத்துவ உதவி: உடனே மருத்துவமனைக்குச் சென்று ரேபிஸ் தடுப்பூசி (Anti-Rabies Vaccine) மற்றும் தேவைப்பட்டால் ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் (RIG) செலுத்தவும்.
தாமதிக்க வேண்டாம்: முதல் ஊசி கடித்தவுடன் 24-48 மணி நேரத்திற்குள் செலுத்தப்பட வேண்டும். முழு தடுப்பூசி அட்டவணையை (பொதுவாக 4-5 டோஸ்) மருத்துவர் பரிந்துரைத்தபடி பின்பற்றவும்.
The post நாய் கடித்த பிறகு தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து: பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.
