2 நாட்கள் பயணமாக சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலம் காட்பாடி செல்கிறார்: வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக சென்னையில் இருந்து ரயில் மூலம் காட்பாடி செல்கிறார். வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக வேலூர், திருப்பத்தூர் செல்கிறார். இதற்காக அவர் வருகிற 25ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலம் காட்பாடி செல்கிறார். ரயில் நிலையத்தில் அவருக்கு திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து வேலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்கிறார். மாலை சுமார் 5 மணிக்கு அணைக்கட்டில் கலைஞரின் திருஉருவ சிலையை அவர் திறந்து வைக்கிறார். மேலும் அங்கு கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலய கட்டிடத்தையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு செல்கிறார். திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே புதிதாக நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைக்கிறார். அன்று இரவு திருப்பத்தூர் மாவட்டத்தில் தங்குகிறார்.

26ம் தேதி காலை 9 மணிக்கு ஜோலார்பேட்டை அருகே உள்ளே பொன்னேரியில் பிரமாண்ட அரசு விழா நடைபெறுகிறது. இதில் மாவட்டத்தில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக வருகிற 25, 26 ஆகிய 2 நாட்கள் வேலூர், திருப்பத்துார் மாவட்டத்தில் டிரோன்கள், விளம்பர பலூன்கள் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மீறி டிரோன்கள், விளம்பர பலூன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post 2 நாட்கள் பயணமாக சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலம் காட்பாடி செல்கிறார்: வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: