தைலாபுரத்தில் 2வது நாளாக ஆலோசனை நான் நியமித்த நிர்வாகிகளை யாரும் மாற்ற முடியாதுP: பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி உத்தரவு

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், 2வது நாளாக தென் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நான் தான் உங்களை பதவியில் நியமித்துள்ளேன். எனவே யாரும் உங்களை மாற்ற முடியாது, நீங்கள் ஒன்றிய, நகர நிர்வாகிகளை நியமித்து கட்சிப்பணிகளை ேமற்கொள்ளுங்கள் என தடாலடியாக பேசியுள்ளார். பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையிலான மோதல் முடிவுக்கு வராத நிலையில் இருவரும் தனித்தனியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் அன்புமணி நேற்று முன்தினம் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் தைலாபுரத்தில் வட மாவட்டங்களை சேர்ந்த பாமக நிர்வாகிகளுடன் நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் 42 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். பின்னர் கட்சியின் பொதுச்செயலாரான வடிவேல் ராவணனை நீக்கி, முரளி சங்கரை புதிதாக அப்பதவிக்கு நியமித்து உத்தரவிட்ட ராமதாஸ், 16ம்தேதி தென் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் 2வது நாளாக பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, கும்பகோணம் உள்ளிட்ட 32 தென் மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் 30 பேர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர்களில் 23 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு 21 பேர் பங்கேற்றனர்.

மீதி உள்ள மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் தொலைபேசி மூலம் ராமதாஸ் இடம் ஏன் வரவில்லை என்ற தகவல் தெரிவித்துள்ளார். முதல் கூட்டத்தில் ஆலோசித்ததை போன்று, பூம்புகாரில் ஆகஸ்ட் 10ல் நடைபெறும் மகளிர் சங்க மாநாடு, பொதுக்குழு கூட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக நிர்வாகிகளிடம் ராமதாஸ் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் உங்களை பதவியில் நான்தான் நியமித்துள்ளேன். யாராலும் உங்களை மாற்ற முடியாது. நிரந்தர மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் நீங்கள்தான். தொடர்ந்து கட்சிப் பணியை செய்து வாருங்கள், பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, ஒன்றிய, நகர நிர்வாகிகளை நியமனம் செய்யுங்கள் என ராமதாஸ் உத்தரவிட்டதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தின் முடிவில் நிர்வாகிகளுக்கு விருந்து அளிக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்திலும் வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், பொருளாளர் சையது மன்சூர், புதிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற முரளி சங்கர், பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் ராம முத்துக்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்றும் (17ம்தேதி) பாமக நிர்வாகிகளை சந்திக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே பொதுவெளியில் ராமதாசிடம், அன்புமணி மன்னிப்பு கேட்ட நிலையில் இது சற்று ஆறுதல் அளிப்பதாக அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post தைலாபுரத்தில் 2வது நாளாக ஆலோசனை நான் நியமித்த நிர்வாகிகளை யாரும் மாற்ற முடியாதுP: பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: