புதிய இணைப்புகள் வழங்க ரூ.317 கோடிக்கு புதிய குடிநீர் திட்டம்

*மாநகராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்

ஈரோடு : ஈரோடு மாநகராட்சியில் ரூ.317 கோடியில் புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார்.

ஆணையாளர் அர்பித் ஜெயின், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு மேயர் நாகரத்தினம், ஆணையாளர் அர்பித் ஜெயின், துணை ஆணையாளர் தனலட்சுமி, மாநகர பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்து பேசினார்.

தொடர்ந்து அதிகாரிகள் பேசியதாவது:ஒரு வார்டு பகுதிக்கு ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது சம்பந்தப்படட கவுன்சிலருக்கு தகவல் தெரிவிக்கப்படும். கவுன்சிலர்கள் கூறும் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் மீதான நடவடிக்கை, தீர்வு குறித்து உடனடியாக அவர்களுக்கு தெரிவிக்கப்படும். குப்பை மேலாண்மையில் சில சவால்கள் உள்ளன. அவற்றை விரைவில் சரி செய்து விடுவோம்.

தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளால் அதிக குப்பை சேருகிறது. அவற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சியின் வீடுகள், வீதிகள் அடிப்படையில் 948 தூய்மை பணியாளர்கள், 285 டிரைவர்கள், 47 மேற்பார்வையாளர்கள் தேவை. ஆனால் இங்கு 1,052 தூய்மை பணியாளர்கள் இருக்கிறார்கள்.

இவர்களை சரியாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சாலை ஆக்கிரமிப்பு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கான முடிவு நாளை (அதாவது இன்று) வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாநகராட்சி பகுதியில் கூடுதலாக ஒரு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக ரூ.317 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த திட்டம் வந்ததும், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் சேர்க்கப்படாத பகுதிகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். ஈரோடு மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் அம்ரூத் மித்ரா திட்டத்தில் சேர்க்கப்பட்டு தலா 3 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

The post புதிய இணைப்புகள் வழங்க ரூ.317 கோடிக்கு புதிய குடிநீர் திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: