தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்காத ஒன்றிய அரசுக்கு ஒ.பன்னீர்செல்வம் கண்டனம்..!!

சென்னை: தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்காத ஒன்றிய அரசுக்கு அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்தல் போன்ற பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சமக்ரா சிக்ஷா திட்டம் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் பங்கு அறுபது விழுக்காடு எனவும், மாநில அரசின் பங்கு நாற்பது விழுக்காடு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை பின்பற்றாததன் காரணமாக 2024-2025 ஆம் ஆண்டு சம்கரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய 2,151 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நிதியை நம்பி கிட்டத்தட்ட 65 லட்சம் மாணவ, மாணவியர் தனியார் பள்ளிகளில் கல்வி பெற்று வருவதோடு, 6 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களும் பயனடைந்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தின்கீழான ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக தனியார் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதோடு மட்டுமல்லாமல், அரசு சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி, பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப் பணி உள்ளிட்ட பல பணிகள் முடங்கிப் போயுள்ளன. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த ஆண்டு 25 விழுக்காடு மாணவ, மாணவியரை தனியார் பள்ளிகளில் சேர்க்க இயலாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல்,கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தற்போது தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியரின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது. ஒன்றிய அரசின் நிபந்தனைகளை மாநில அரசு ஏற்காதது என்பது ஒன்றிய , மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்சனை.

இந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி நிதியை விடுவிக்காமல் இருப்பது அப்பாவி ஏழை எளிய மாணவ, மாணவியரின் கல்வியையும், ஆசிரியர்களையும் பாதிக்கும் செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை கல்வி உரிமைச் சட்டத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது. சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் நிதியை விடுவிக்காதது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் ஏழையெளிய மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் ஆசிரியர்களை பாதிக்கும் செயல் என்பதைக் கருத்தில் கொண்டு, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் 2024-2025ம் ஆண்டிற்கான ரூ.2,151 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்காத ஒன்றிய அரசுக்கு ஒ.பன்னீர்செல்வம் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: