மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1.38 கோடியில் கூடுதல் கட்டிடம்

*அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார்

தக்கலை : பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.1.38 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார்.

கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தக்கலையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டிடம் மற்றும் இந்திய மருத்துவ பிரிவு கட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா கலெக்டர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியினை துவக்கிவைத்து பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாளிலிருந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மாவட்டத்திற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவமனைகளில் பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் கட்ட நிதி ஒதுக்கீடு, நவீன, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கி வருகிறார்கள்.

பத்மநாபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தக்கலை, பத்மநாபபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியிலிருந்து வரும் நோயாளிகளுக்கு மேம்பட்ட மருத்துவ சேவையை வழங்கி வருகிறது.

இம்மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயளிகள் பிரிவு, ஆய்வகங்கள், மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.தொடர்ந்து பத்மநாபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையினை மேம்படுத்தும் பொருட்டு, ரூ.1 கோடி மதிப்பில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டிடம் கட்டப்படவுள்ளது.

இங்கு நுண்ணுயிரியல் ஆய்வகம், உயிர் வேதியியல் ஆய்வகம், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் அறை, வைராலஜி ஆய்வகம், நோயியல் ஆய்வகம், பயிற்சி அறை, பதிவு அறை, சேமிப்பு அறை மற்றும் கிருமி நீக்கம் அறை அமைய உள்ளது.

மேலும் ரூ.37.50 லட்சம் மதிப்பில் இந்திய மருத்துவ பிரிவு கட்டிடமும் கட்டப்படவுள்ளது. இப்பிரிவு கட்டிடத்தில் மருத்துவர் அறை, சிகிச்சை அறை, மருந்து கிடங்கு, காத்திருப்போர் மண்டபம், மருந்தகம் உள்ளிட்டவைகள் கட்டப்படவுள்ளது.

தொடர்ந்து பணிகள் குறித்த விளக்கங்களை பொறியாளர்களிடம் கேட்டறியப்பட்டது. கட்டிட பணிகளை வேகமாகவும், நேர்த்தியாகவும், விரைந்தும் கட்டி முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ேபசினார்.

நிகழ்ச்சியில் இணை இயக்குநர் மருத்துவம் சகாய ஸ்டீபன்ராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜோசப் ரென்ஸ், உதவி செயற்பொறியாளர் பிரசாத், மருத்துவமனை கண்காணிப்பாளர் கோசல்ராம். உண்டு உறைவிட மருத்துவர் கோலப்பன், பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள்சோபன், நகர திமுக ெசயலாளர் சுபிஹான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவமனையில் ஆய்வு

அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் மாவட்ட கலெக்டர் அழகுமீனா, பத்மநாபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்கள். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகளை சந்தித்து அவர்களின் உடல்நலம் மற்றும் மருத்துவர்களால் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

The post மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1.38 கோடியில் கூடுதல் கட்டிடம் appeared first on Dinakaran.

Related Stories: