மாலை 3 முதல் 4 மணி வரை ரூ.500 கட்டணத்தில் பழநியில் பிரேக் தரிசனம் பக்தர்கள் கருத்து என்ன? 29ம் தேதி வரை தெரிவிக்கலாம்

பழநி: பழநி மலைக்கோயிலில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனம் செய்யும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பக்தர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு ஆண்டிற்கு சராசரியாக சுமார் 1.20 கோடி பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிகளவிலான பக்தர்கள் வரும் பிரதான கோயில்களில் ‘இடைநிறுத்த தரிசனம்’ (பிரேக் தரிசனம்) வசதி ஏற்படுத்தப்படுமென சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி பழநி மலைக்கோயிலிலும் பிரேக் தரிசன சேவை துவங்குவது குறித்து பக்தர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் பிரேக் தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்படும். பிரேக் தரிசன சேவை தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறும் 10 நாட்கள், மாத கார்த்திகை, தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் செயல்படுத்தப்பட மாட்டாது.

இச்சேவைக்கு பக்தர் ஒருவரிடம் ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படும். பிரேக் தரிசனம் செய்யும் பக்தருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம், தேங்காய், பழம், விபூதி அடங்கிய மஞ்சள் பை தொகுப்பு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக பக்தர்கள் ஜூன் 29ம் தேதிக்குள் தங்களது ஆட்சேபனை அல்லது ஆலோசனை கருத்துகளை எழுத்துப்பூர்வமாக கோயில் அலுவலகத்தில் நேரடியாக வழங்கலாம். தவிர இணை ஆணையர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில், பழநி என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கலாம். இத்தகவல் கோயில் நிர்வாகம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாலை 3 முதல் 4 மணி வரை ரூ.500 கட்டணத்தில் பழநியில் பிரேக் தரிசனம் பக்தர்கள் கருத்து என்ன? 29ம் தேதி வரை தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: