டபிள்யுடிசி இறுதிப் போட்டி: வெற்றிக்கு அருகில் தென் ஆப்ரிக்கா; தடுக்க ஆஸ்திரேலியா போராட்டம்

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், 3ம் நாளில், 282 ரன் இலக்கை நோக்கி ஆட்டத்தை துவக்கிய தென் ஆப்ரிக்கா, 40 ஓவர் முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்திருந்தது.
ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் (டபிள்யுடிசி) தொடரின் இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா- தென் ஆப்ரிக்கா அணிகள் இடையே கடந்த 11ம் தேதி துவங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 212 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதைத் தொடர்ந்து, 2வது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலியா, 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்திருந்தது.

இந்நிலையில், நேற்று 3ம் நாள் ஆட்டத்தை ஆஸி வீரர்கள் தொடர்ந்தனர். 65 ஓவர் முடிவில் ஆஸி 207 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ஸ்டார்க், 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதையடுத்து, 282 ரன் வெற்றி இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. துவக்க வீரர்களாக அய்டன் மார்க்ரம், ரையான் ரிக்கெல்டன் ஆடினர். ரிக்கெல்டன் 6 ரன்னிலும், பின் வந்த வியான் முல்டர் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மறு முனையில் மார்க்ரம் சிறப்பாக ஆடி நிதானமாக ரன்களை சேர்த்தார். 40 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்கா, 2 விக்கெட் இழப்புக்கு 164 ரன் சேர்த்திருந்தது. அய்டன் மார்க்ரம் 76, டெம்பா பவுமா 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இன்னும் 2 நாட்கள் முழுமையாகவும், வெற்றிக்கு 118 ரன்களே தேவைப்படுவதாலும், தென் ஆப்ரிக்கா வெற்றி பெறும் நிலை காணப்பட்டது.

* அதிக விக்கெட் வீழ்த்தி ஸ்டார்க் சாதனை
ஐசிசி இறுதிப் போட்டிகளில் இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகம்மது ஷமி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய சாதனையை படைத்திருந்தார். இந்நிலையில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஐசிசி இறுதிப் போட்டிகளில் அதிகபட்சமாக 11 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதன் பின், தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சை ஆடியபோதும், தேனீர் இடைவேளை வரை, ஸ்டார்க் மேலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

The post டபிள்யுடிசி இறுதிப் போட்டி: வெற்றிக்கு அருகில் தென் ஆப்ரிக்கா; தடுக்க ஆஸ்திரேலியா போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: