விளையாட்டரங்கு பாதுகாவலருடன் கம்பீர் மோதல்

லண்டன்: இங்கிலாந்து – இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லண்டன் கென்னிங்டன் ஓவல் அரங்கில் கடைசி டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது. அந்த அரங்கில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முன்னிலையில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சென்ற கென்னிங்டன் அரங்கின் பாதுகாவலர் லீ ஃபோர்டிஸ், இந்திய வீரர்களிடம் ஏதோ கூறினார். அப்போது அவரிடம் கம்பீர் பதிலுக்கு ஏதோ சொன்னார். அதை தொடர்ந்து சாதாரண பேச்சு வாக்குவாதமாக மாறியது. முடிவில் கம்பீர், ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்லத் தேவையில்லை’ என்று கோபத்துடன் கூறியது எல்லோருக்கும் கேட்டது.

இது குறித்து கென்னிங்டன் அரங்கம் தரப்பிலோ, இந்திய அணித் தரப்பிலோ எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்த இடத்தில், ‘பயிற்சி செய்யக் கூடாது’ என்று லீ கூறியதுதான் பிரச்னைக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, லீ ஃபோர்டிசிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘அவர் என்ன மாதிரி நடந்து கொண்டார் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். இதைப் பற்றி அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்’ என்றார். இதற்கிடையே, இந்திய அணியில், பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடம்பெறுவார் என தகவல்கள் கூறுகின்றன.

The post விளையாட்டரங்கு பாதுகாவலருடன் கம்பீர் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: