அகமதாபாத்: அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார். அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று மதியம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், வானில் பறக்க துவங்கிய 30 வினாடிகளில் விழுந்து வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமான பயணிகள் உட்பட 241 பேர் பலியாகினர். 204 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 37 பேரின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். 44 பேர் படுகாயமடைந்தனர்.
விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் விபத்தில் பலியாகி உள்ளார். உலகையே உலுக்கி உள்ள இந்த கோர விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றார்.விமானம் விபத்துக்குள்ளான இடத்தை நேரில் பார்வையிட்ட அவர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் விமான விபத்தில் சிக்கிய தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களையும் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். விமானம் தீப்பிடித்து எரிந்ததில் கரிபிடித்திருக்கும் கட்டிடங்கள், அதில் தொங்கியபடி இருக்கும் விமானத்தின் பாகங்கள் ஆகியவற்றை பிரதமர் பார்வையிட்டார். மீட்புப் பணி, சிகிச்சையில் இருப்போரின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடி கேட்டறிந்தார்.
The post அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு :மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல்!! appeared first on Dinakaran.