சென்னை: ஆசிரியர்களுக்கு திமுக அரசு என்றும் துணைநிற்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 2,430 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்; திராவிட மாடல் அரசு அமைந்தது முதல் ஒவ்வொரு திட்டமும் வரலாற்றுச் சாதனையாக அமைந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது.
படிக்கச் சொல்லும் அதேநேரத்தில் மாணவர்களை விளையாடவும் ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும். இந்தியாவில் தொடக்கக் கல்வியில் 100 சதவீதம் இடைநிற்றல் இல்லாத மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறையில் முதல் முறையாக மலைப்பகுதியில் காலிப் பணியிடமே இல்லை என சொல்லும் அளவிற்கு 100% நியமனம் செய்யப்பட்டுள்ளது. அன்பில் மகேஸ் பணிக்காலம்தான் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலம் என முதலமைச்சர் கூறியிருக்கிறார். அது மீண்டும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு திமுக அரசு என்றும் துணைநிற்கும்.
ஒன்றிய அரசு கல்விக்கான நிதியை நிறுத்தியபோதும் திட்டங்களை தொடர்கிறது தமிழக அரசு. தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான முதலீடு ஆசிரியர்கள் என்றும் புகழாரம் சூட்டினார். இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பல்வேறு துறை அமைச்சா்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
The post ஆசிரியர்களுக்கு திமுக அரசு என்றும் துணைநிற்கும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.
