பெரியபாளையம் அடுத்த புதுப்பாளையம்-காரணி இடையே ஆரணியாற்றின் குறுக்கே ரூ.20 கோடியில் புதிய மேம்பாலப் பணிகள் விறுவிறு: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஊத்துக்கோட்டை, ஜூன் 13: பெரியபாளையம் அருகே, புதுப்பாளையம்-காரணி இடையே ரூ.20 கோடி மதிப்பில் ஆரணியாற்றின் குறுக்கே புதிய மேம்பாலப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பெரியபாளையம் அருகே, புதுப்பாளையம், காரணி, எருக்குவாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக புதுப்பாளையம் பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்களும் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள இந்த தரைப்பாலத்தின் வழியாக ஆரணிக்குச் செல்கின்றனர்.

பின்னர் அங்கிருந்து கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கும், பெரியபாளையம் சென்று அங்கிருந்து திருவள்ளூர், பூந்தமல்லி, சென்னை ஆகிய பகுதிகளுக்கும் சென்று வருகிறார்கள். இந்நிலையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் அமைச்சராக இருந்த வேழவேந்தன், அப்போது புதுப்பாளையம் கிராமத்திற்கு ஆரணியாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்துக்கொடுத்தார். பின்னர் மழை காலத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் ஏரி நிரம்பி, அதிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் அந்த தண்ணீர் வெள்ளப்பெருக்காக மாறி நாகலாபுரம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் வழியாக ஆரணி, பொன்னேரிக்குச் சென்று பழவேற்காடு கடலில் கலக்கும்.

அவ்வாறு வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது புதுப்பாளையம் தரைப்பாலம் மூழ்கிவிடும். மேலும், தண்ணீர் அதிகமாக வந்தால், இக்கிராம மக்கள் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு பெரியபாளையம் சென்று அங்கிருந்து மற்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். எனவே புதுப்பாளையம் கிராமத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என 10 கிராம மக்கள் கடந்த வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையறிந்த அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், அப்போதைய திருவள்ளூர் கலெக்டர் ஆல்பீ ஜான் வர்கீஸ், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் ஆய்வு செய்து, புதுப்பாளையம்-காரணி இடையே மேம்பாலம் அமைப்பதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ரூ.20 கோடி மதிப்பீட்டிலான பாலம் கட்டுமானப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து புதுப்பாளையம்-காரணி இடையே ஆரணியாற்றின் குறுக்கே புதிய பாலப்பணிகள் மேம்பால கட்டுமானப் பணிகள் தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

The post பெரியபாளையம் அடுத்த புதுப்பாளையம்-காரணி இடையே ஆரணியாற்றின் குறுக்கே ரூ.20 கோடியில் புதிய மேம்பாலப் பணிகள் விறுவிறு: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: