திருச்சியில் நாளை ‘மதசார்பின்மை காப்போம்’ பேரணி: திருமாவளவன் தலைமையில் நடக்கிறது

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் தலைமையில் நாளை திருச்சியில் ‘மதசார்பின்மை காப்போம்’ பேரணி நடைபெற உள்ளது. இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது: ‘மதசார்பின் மை காப்போம்’ மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியை திருச்சியில் ஒருங்கிணைப்பதற்கு முக்கிய காரணம் திருச்சி மாவட்டம் தமிழகத்தின் மைய பகுதி என்பதால் 4 முனையில் இருந்தும் அனைவரும் எளிதாக வந்து சேர முடியும். பேரணி சென்னை -மதுரை 4 வழி நெடுஞ்சாலையில் டி.வி.எஸ். அருகில் இருந்து புறப்படும். இதற்காக டி.வி.எஸ். ரவுண்டானா அருகே மேடை அமைக்கப்படுகிறது. பேரணி நகராட்சி பள்ளி அருகில் நிறைவடையும். 2.8 கி.மீ. தூரத்துக்கு பேரணி செல்ல போலீஸ் அனுமதித்து உள்ளது.

அம்பேத்கர் போன்று கோட்-சூட் அணிந்த 10 ஆயிரம் தொண்டர்கள் அணிவகுப்பார்கள். தொடர்ந்து சீருடை அணிந்த பெண்கள் செல்வார்கள். 50 ஆயிரம் பெண்களும், நீல நிற சேலை சிகப்பு ஜாக்கெட்டுடன் பார்டரில் பானை சின்னம் பொறித்து அணிந்து வருவார்கள். நீலச்சட்டை அணிந்து தொண்டர்கள் கலந்துகொள்கிறார்கள். நீல கலர் டீ-சர்ட், கட்சி மப்ளர் அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சுமார் 5 லட்சம் தொண்டர்கள் பேரணியில் பங்கேற்கிறார்கள். அவர்களுக்கு குடிநீர், நடமாடும் கழிப்பிட வசதி, மருத்துவ வசதிகள் திருச்சி மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மதம் மக்களுக்காக தவிர அரசுக்கானதல்ல. மதசார்பின்மை அரசியல் அமைப்பு சட்டத்தின் உயிர் கோட்பாடு, குடியுரிமை திருத்த சட்டம், வக்பு திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அரசியல் அமைப்பு சட்டத்தை நீர்த்து போக செய்வதுதான் பா.ஜ. செயல் திட்டம். இதனை நாட்டு மக்களுக்கு உணர்த்த வேண்டும். அரசியல் அமைப்பு சட்டம் பாதிக்கப்படுவதை எடுத்துரைப்பதே பேரணியின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருச்சியில் நாளை ‘மதசார்பின்மை காப்போம்’ பேரணி: திருமாவளவன் தலைமையில் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: